காரைக்கால்: பொங்கல் விடுமுறையையொட்டி திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் நேற்று மட்டும் சுமார் 75 ஆயிரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். காரைக்கால் திருநள்ளாறில் உள்ள உலக புகழ்மிக்க ஸ்ரீதர்பாராண்யேஸ்வரர் கோயிலில், சனிபகவன் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் இக்கோயிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் பொங்கல் விடுமுறை என்பதால் நேற்று (18ம்தேதி) திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் கோயிலில், வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் நளன் குளத்தில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை முதல் மாலை 6 மணி வரை சுமார் 75 ஆயிரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாக அதிகாரி சுபாஷ் தலைமையில் ஊழியர்கள், பக்தர்களுக்கான அடிப்படை தேவைகளை செய்து கொடுத்தனர்.