×

1995-ல் இருந்து நடைமுறை: CAA என்பது குடியுரிமையை பறிக்கும் சட்டம் அல்ல; கொடுக்கும் சட்டம்...மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

சென்னை: குடியுரிமை சட்டத்தால் பழைய நடைமுறைகளில் எந்த பிரச்சனையும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா  நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. தொடர்ந்து, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டத்திற்கு ஆதரவாக அதனை விளக்கி மத்திய அமைச்சர்கள், பல்வேறு கட்சி  தலைவர்கள், பாஜக நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினர் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குடியுரிமை சட்டம் தொடர்பாக சென்னை தி.நகரில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, அசாமில் நடக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு, நீதிமன்ற உத்தரவால்  நடக்கிறது. அந்த நடைமுறை பிற மாநிலங்களுக்கு பொருந்தாது. குடியுரிமை திருத்த சட்டம் என்பது குடியுரிமை கொடுக்கும் சட்டம். யாருடைய அந்தஸ்தையும் பறிக்கும் சட்டம் அல்ல என்றார். மேலும் பேசிய அவர், பழைய நடைமுறைகளில்  எந்த பிரச்னையும் இல்லை. யாருடைய குடியுரிமை பறிக்கப்படும் எனக்கூறுகிறார்களோ அவர்களிடம் விளக்கம் தர தயாராக இருக்கிறோம் என்றார்.

 நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்த போது, எதிர்க்கட்சியினரின் அனைத்து கேள்விகளுக்கும் விரிவாக பதில் அளிக்கப்பட்டது. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. முறையாக பதிவு செய்தால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்றும்  தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை பார்க்கும் போது வேதனையாக உள்ளது. குடியுரிமை சட்டத்தை பற்றி பேசுவோர் அகதிகள் முகாமை பற்றி பேசவில்லை. மனித உரிமையை பற்றி பேசாதவர்கள்தான் குடியுரிமை  சட்டத்திற்கு எதிராக பேசுகிறார்கள்.

அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்களின் உரிமைகளை பற்றி யாரும் பேசுவது இல்லை. முகாமில் வசிப்போருக்கும் குடியுரிமை வழங்கப்படும். குடியுரிமையை பறிக்க சட்டம் கொண்டு வரவில்லை. பாகிஸ்தான்,  வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருக்கும் மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம், 1995ல் இருந்து நடைமுறையில் இருக்கிறது என்றும் கூறினார்.

சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்வது செல்லாது. அவர்கள் சொல்வது சட்டத்திற்கு புறம்பானது. அவர்கள் சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தால் எந்த பாதிப்பும் இல்லை. குடியுரிமை சட்டம் குறித்து  உண்மைக்கு புறம்பாக பேசி மக்களை கொந்தளிப்புக்கு உள்ளாக்க வேண்டாம், பொறுப்புடன் பேச வேண்டும்.6 ஆண்டுகளில் 2,838 பாகிஸ்தானியர்கள், 914 ஆப்கானிஸ்தானியர்கள், 172 வங்கதேசத்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.1964-  2008 வரை 4 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை மக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.


Tags : Nirmala Sitharaman ,CAA ,Citizenship Law , Procedure from 1995: CAA is not a citizenship law; The law of giving ... Speaking to the Chief Minister Nirmala Sitharaman
× RELATED முந்தைய முறையை விட தேர்தல் பத்திர...