×

புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகே கடும் இடநெருக்கடியில் இயங்கும் உழவர் சந்தை: சாலையை ஆக்கிரமித்த கடைகளால் போக்குவரத்து நெரிசல்

புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள உழவர் சந்தை கடும் இடநெருக்கடிக்கு மத்தியில் இயங்கி வருகிறது. இதனால் சாலையை ஆக்கிரமித்து விவசாயிகள் காய்கறி விற்பனை செய்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் புதுவை நகராட்சிக்கு பின்புறம் உள்ள இடத்தை உழவர் சந்தைக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 புதுவையில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் மூலம் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. ஆனால், இடைத்தரகர்கள் மட்டும் கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றனர். இடைத்தரகர்களின்றி விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை உழவர் சந்தைகள் மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யும் திட்டத்தை புதுவை அரசு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்தது.  அதன்படி, பழைய பேருந்து நிலையம், அரியாங்குப்பம், லாஸ்பேட்டை, அரும்பார்த்தபுரம் ஆகிய பகுதிகளில் உழவர்சந்தைகள் ஆரம்பிக்கப்பட்டது. இதில் அரும்பார்த்தபுரம் உழவர் சந்தை மட்டும் சில மாதங்களிலேயே மூடுவிழா கண்டது. மற்ற இடங்களில் துவங்கப்பட்ட உழவர் சந்தைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. இதன் மூலம் பொதுமக்கள் குறைந்த விலையில் காய்கறிகளை வாங்கி பயனடைந்து வருகின்றனர்.

 இந்நிலையில் புதுவை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள உழவர் சந்தையில் 120 கடைகள் உள்ளது. இதை சார்ந்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இங்கு விவசாயிகளுக்காக  குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
 இந்த உழவர் சந்தையின் அலுவலக நேரம் என்பது காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரைதான். ஆனால், கிராமங்களிலிருந்து விவசாயிகள் பேருந்து மூலம் காய்கறிகளை கொண்டு வருவதற்கு சற்று காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் தினமும் காலை 6 மணியளவில் உழவர்சந்தை அலுவலகத்தில் தராசு பெற்று விற்பனையை துவங்குகின்றனர். இதன் காரணமாக, மதியம் 1.30 மணி வரை விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சந்தை நகரப்பகுதியில் அமைந்துள்ளதால் திருக்கனூர், மண்ணாடிப்பட்டு, பி.எஸ்.பாளையம், பாகூர், திருபுவனை, மதகடிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்களில் இருந்து விவசாயிகள் வந்து காய்கறிகளை விற்பனை செய்துவிட்டு செல்ல எளிதாக உள்ளது.

 இதனால், உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகளின் வருகை அதிகரித்து, கடைகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. அதற்கேற்ப சந்தையில் போதுமான இடவசதி இல்லாமல், விவசாயிகள் சாலையை ஆக்கிரமித்து காய்கறி விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இங்கு வரும் பொதுமக்களும் சாலையோரமாக வாகனங்களை நிறுத்திவிட்டு காய்கறிகளை வாங்குகின்றனர். பேருந்துகளும் சாலையோரமாகவே நிறுத்தப்படுகின்றன.  இதுபோன்ற காரணங்களால், அவ்வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, புதுவை அரசு விவசாயிகள், பொதுமக்கள் வந்து செல்ல சிரமமில்லாத இடத்தில் உழவர் சந்தையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அரும்பார்த்தபுரத்தில் குடோன் அமைக்க திட்டம்
அரும்பார்த்தபுரம் பகுதியில் கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி முதல்வர் ரங்கசாமியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தை சில மாதங்களிலேயே மூடப்பட்டது. அங்கு கட்டப்பட்ட கடைகள், அலுவலக அறைகள் உள்ளிட்டவை பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சேதமடைந்து வருகிறது. அந்த இடத்தை சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அந்த இடத்தில் விவசாயிகளுக்காக குளிர்சாதன வசதியுடன் கூடிய குடோன் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் விவசாயிகள் அதிகமாக விளைச்சல் செய்த காய்கறிகளை குடோனில் வீணாகாமல் வைத்து விற்பனைக்கு கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுவை நகராட்சிக்கு சொந்தமான
இடத்தை ஒதுக்கி தர கோரிக்கை’
இதுகுறித்து உழவர் சந்தை வேளாண் அலுவலர் ஹரிஹரனிடம் கேட்டபோது, `உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அனைத்தும் செய்து கொடுத்துள்ளோம். இங்குள்ள சில்லரை விற்பனை கடைகளுக்கு தலா ரூ.20ம், மொத்த விற்பனை கடைகளுக்கு ரூ.70 என தினமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விவசாயிகளுக்காக இந்த கட்டண தொகையை தளர்த்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம். தற்போது அதிகமான விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்ய வருகின்றனர். இதனால் உழவர் சந்தையில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், உழவர் சந்தையில் பாப்ஸ்கோ நிறுவனத்துக்கு 8 கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்நிறுவனம் நஷ்டமடைந்ததால், கடந்த சில மாதங்களாக பாப்ஸ்கோவுக்கு ஒதுக்கப்பட்ட கடைகள் மூடியே கிடக்கின்றன.

அதனை ஒப்படைக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளோம். அங்கிருந்து இதுவரை பதில் வரவில்லை.  இந்நிலையில் இடநெருக்கடி காரணமாக, உழவர் சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு மாற்றினால் விவசாயிகள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படும். எனவே, புதுவை நகராட்சிக்கு பின்புறம் உள்ள இடத்தை உழவர் சந்தைக்கு ஒதுக்கி கொடுத்தால், அங்கு 250 கடைகள் அமைத்து விவசாயிகளுக்கு வழங்க முடியும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க முடியும். அதேநேரத்தில் விவசாயிகளும் பலனடைவார்கள். இதற்கான நடவடிக்கையை புதுவை அரசு எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Puducherry Old Bus Stand , Puducherry ,Old Bus Stand, Puducherry ,Stand
× RELATED கோயிலில் தரமற்ற பிரசாதம் விற்ற...