×

பேரணாம்பட்டு தாலுகாவாக மாற்றி 3 ஆண்டுகளாகியும் தரம் உயர்த்தப்படாத அரசு மருத்துவமனை

* டாக்டர்கள் குறைபாட்டால் தவிக்கும் நோயாளிகள்
* அடிப்படை சிகிச்சை மட்டுமே கிடைப்பதால் விரக்தி

பேரணாம்பட்டு: தாலுகா அந்தஸ்து பெற்று 3 ஆண்டுகளாகியும் தரம் உயர்த்தப்படாத அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் குறைபாட்டால் அடிப்படை சிகிச்சை மட்டுமே மக்களுக்கு கிடைப்பதாக வேதனை குரல்கள் எழுந்துள்ளன. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை 2 இடங்களில்  40 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் உருவாக்கப்பட்டது.  இதில் உள்நோயாளிகள் பிரிவு மற்றும் வெளிநோயாளிகள் பிரிவு என இரண்டு இடங்களில் அரசு மருத்துவமனை இயங்கி வந்தன. கடந்த 2016ம் ஆண்டு பேரணாம்பட்டு தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, தற்காலிக தாலுகா அலுவலகத்திற்காக அரசு மருத்துவமனையின் ஒரு இடத்தை வழங்கினர்.

தற்போது பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை நெடுஞ்சாலையில் பேருந்து நிலையத்திற்கு அருகில் அரசுப்பள்ளி எதிரில் இயங்கி வருகிறது.   இங்கு தினந்தோறும்  பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் பத்தலபல்லி, அரவட்லா, கோக்கலூர், பாஸ்மார்பெண்டா, உள்ளிட்ட மலை கிராமங்களில் இருந்தும் சுமார் 1200 பேர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
 பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில்  பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவப்பிரிவு. எலும்பு அறுவை சிகிச்சை,  காது மூக்கு தொண்டை பிரிவு,  குழந்தைகள் நலப்பிரிவு,   மனநோய் மருத்துவப்பிரிவு,  அடிப்படை பல் மருத்துவப்பிரிவு  உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. ஆனாலும் இச்சிகிச்சைகள் முறையாக மக்களுக்கு கிடைப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக மகப்பேறு பிரிவில்  கர்ப்பகால பரிசோதனைகள், ஸ்கேன், குடும்ப நல அறுவை சிகிச்சை, பிரசவம் சம்பந்தபட்ட பிரச்னைகள், சிசேரியன் அறுவை சிகிச்சை  உள்ளிட்ட சிகிச்சைகளை வழங்குவர்.  இதற்கு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் 1 மருத்துவர் மட்டுமே பணியாற்றி வந்த நிலையில், தற்போது கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணியிட மாற்றம்  செய்யப்பட்டு  வேலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட்டார்.    சுமார் 3 மாதங்களாக மகப்பேறு மருத்துவர் இன்றி இப்பிரிவு தடுமாற்றம் அடைந்துள்ளது.  இதனால் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு  பிரசவத்திற்காக வருபவர்கள் மருத்துவரின்றி  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சூழல் நிலவுகிறது. மேலும் இங்கு 3 மாதங்களாக ஸ்கேன் இயந்திர பழுது  காரணமாக கர்ப்பிணிகள்  ஸ்கேன் எடுக்க முடியாமல் தனியாரிடம் அதிக கட்டணம் செலுத்தி ஸ்கேன் எடுக்கும் நிலை உள்ளது.

அதோடு இரவு நேரங்களில் பிரசவத்திற்கு வரும்  மலை கிராம மக்கள்  மருத்துவர் இல்லாததால் வேலூர் அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும்  செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது ஒருபுறம் இருக்க அரசு மருத்துவமனையில் உள்ள 1 ஆம்புலன்சில் ஒரே நேரத்தில் காய்ச்சல் நோயாளிகள், விபத்தில் சிக்கியவர்கள் என 5 அல்லது 6 பேர் ஒன்றாக ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.  1 லட்சத்திற்கும் மேலாக வசிக்கும் பேரணாம்பட்டு நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ளவர்கள் பயன்பெறும் அரசு மருத்துவமனைக்கு 2 மகப்பேறு மருத்துவரை பணியமர்த்த வேண்டும்.
 அதேபோல் தாலுகா அந்தஸ்துக்கு ஏற்ப 100 படுக்கைகள் இன்றி 30 படுக்கைகள் மட்டுமே உள்ளதால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு நேரங்களில் ஒரு படுக்கையில் 2 பேரை அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகின்றது. மேலும் சில நோயாளிகள் படுக்கைகள் இல்லாமல் வீட்டிற்கு சென்று தங்கிவிட்டு தினந்தோறும் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

கூடுதல் படுக்கை வசதிகள் செய்து தரக்கேட்டும் அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை. மேலும் கண் சிகிச்சை பிரிவு இல்லாததால் கண் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.   அதேபோல்  தோல், நீரிழிவு உள்ளிட்ட மருத்துவ பிரிவுகள் இல்லாத நிலையும் உள்ளது என்கின்றனர் பொதுமக்கள்.அதோடு அறுவை சிகிச்சைக்காக மயக்க மருத்துவ நிபுணர் இல்லாமல் வாலாஜாவில் இருந்து மருத்துவர் வரவழைக்கப்பட்டு அறுவை  சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். இதனால் அறுவை சிகிச்சைக்காக நோயாளிகள் 2 ,3, நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அவசர சிகிச்சை பிரிவிற்கு என்று தனி மருத்துவர்கள் கிடையாது. பொது மருத்துவரே விஷ முறிவு, மாரடைப்பு, தீக்காயம், நீரிழிவு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க நேரிடுகிறது.

இவ்வாறு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத நிலையில் ஒரே நேரத்தில் அனைத்து  நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.  தற்போது உள்ள சூழலில் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் 5 மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவிற்கு தேவைப்படுவதாக தெரிவிக்கின்றனர் மருத்துவ பணியாளர்கள்.அதேபோல் எக்ஸ்ரே  பிரிவிற்கு என்று பணியாளர் நியமிக்கப்படவி–்ல்லை. ஆம்பூர் மருத்துவமனையில் பணிபுரிபவரே பேரணாம்பட்டு  அரசு மருத்துவமனைக்கும் கூடுதலாக பணிபுரியும் அவலம் நிலவுகிறது. பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையை பொறுத்தவரை நீரிழிவு நோயாளிகள் அதிகம் வருவதால், இச்சிகிச்சை வழங்க போதிய மருத்துவர் இல்லாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

நீரிழிவு  நோயால் அவதிப்படும் நோயாளிகள் டையாலிசிஸ் செய்ய வேலூர் செல்ல வேண்டும். இதுபோல் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லாமல் தடுமாறும்  பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளையும் மேம்படுத்தி தரம் உயர்த்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.இதுதொடர்பாக பொதுமக்கள் தரப்பில் கேட்டபோது, ‘பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அடிப்படை சிகிச்சைகள் அளித்தாலும்  நோயாளிகள் அதிகமாக வரும்போது சரியான சிகிச்சை அளிப்பதில்லை. மாறாக வேலூர், குடியாத்தம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி விடுகின்றனர்.  கேட்டால் மருத்துவர்கள் பற்றாக்குறை என்று தெரிவிக்கின்றனர்.  பல் சம்பந்தப்பட்ட  சிகிச்சைகளுக்கு பரிசோதனை மட்டுமே செய்கின்றனர். எக்ஸ்ரே வெளியில் சென்றுதான் எடுக்க வேண்டும். ஆனால் பெயருக்கு பல் சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு, அறுவை சிகிச்சை பிரவு, பொது மருத்துவ பிரிவு என்று பெயர் பலகை மட்டும்  வைத்துள்ளனர்.

பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் திருஞானம் கூறும்போது, ‘பேரணாம்பட்டில் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த சிறுபான்மையினருக்கான   மருத்துவமனை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதியிலிருந்து ₹14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் ஸ்கேன் மிஷின் பழுதாகி உள்ளது. ஸ்கேன் மிஷின் 2 தேவைப்படுகிறது. அதேபோல் நீரிழிவு நோயாளிகளுக்கு டையாலிசிஸ் உபகரணம்  தேவைப்படுகிறது. மருத்துவர்களும் பற்றாக்குறையில் தான் உள்ளனர். இதனால் ஒருவரே அனைத்து பணிகளும் செய்ய வேண்டிய சூழல் உள்ளது.  இதனால் மருத்துவர்களின் பணிச்சுமை அதிகரிக்கிறது. மகப்பேறு மருத்துவரும், மயக்க மருத்துவ நிபுணரும் உடனடியாக தேவைப்படுகிறது. தற்போது அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் உடனடியான துவங்கப்படவேண்டும். அதற்கான முயற்சிகளை மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின் எடுத்து வருகிறார்.

தரம் உயர்த்தப்படும்
இதுகுறித்து கலெக்டர்  சண்முகசுந்தரத்திடம்  கேட்டபோது, ‘பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த கருத்துருக்கள்   அனுப்பப்பட்டு அரசு சார்பில் நிதி ஒதுக்கியுள்ளனர். விரைவில் பணிகள்  தொடங்கப்படும்’ என்று தெரிவித்தார். குடியாத்தம் திமுக எம்எல்ஏ  காத்தவராயன் கூறும்போது, ‘பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த  வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். அதன் பின்னர்  சென்னையில் உள்ள மருத்துவ உயர் அதிகாரிகளை சந்தித்து  பேசியதில்   அதிகாரிகள் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த   உறுதியளித்துள்ளனர். தற்போது ₹14 கோடி நிதி ஒதுக்கியுள்ளனர். இதில்  பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்டு தரம் உயர்த்தப்படும்.  அதேபோல் அனைத்து மருத்துவக் கருவிகளும் அரசு மருத்துவமனைக்கு கிடைக்க  பெறுவதுடன் மருத்துவர்களின் எண்ணிக்கையும் உயரும்.  மேலும் மேல்பட்டியில்  உள்ள ஆரம்ப சுகாதார நிலையமும் தரம் உயர்த்தப்படும்’ என்று தெரிவித்தார்.

Tags : Government hospital , Government hospital, which, been upgraded, 3 years
× RELATED பாளையங்கோட்டை சிறைக் கைதி தப்பி ஓட்டம்