×

தமிழக- கர்நாடக எல்லையில் தொடரும் துயரம் யானைகளின் தாக்குதலால் பரிதவிக்கும் வன கிராமங்கள்

* ஓராண்டில் மட்டும் 25 விவசாயிகள் பலியான அவலம்
* பயிர்களை நாசமாக்குவதால் அழியும் வாழ்வாதாரம்

கிருஷ்ணகிரி: தமிழக-கர்நாடக எல்லை மாவட்டமான கிருஷ்ணகிரியில்  மூன்றில் ஒரு பங்கு வனப்பகுதியாகும். கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர், சூளகிரி, வேப்பனஹள்ளி  என்று முக்கிய நகரங்களை சுற்றி வனப்பகுதிகள் அமைந்துள்ளன. அந்த வனப்பகுதியில் யானைகள், கரடிகள், சிறுத்தைகள், மான்கள், முயல்கள், காட்டு எருமைகள், காட்டு பன்றிகள் என ஏராளமான வன விலங்குகள் வாழ்கின்றன.  அதில் கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் மட்டும் சுமார் 200 யானைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு உட்பட்ட ஜவளகிரி, அய்யூர், நொகனூர், மரக்கட்டா உள்ளிட்ட வனப்பகுதிகளில் உள்ளன. இதைத் தவிர ராயக்கோட்டை அருகே உள்ள ஊடேதுர்க்கம் காட்டிலும் சுமார் 30 யானைகள் உள்ளன.

இந்நிலையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாத இறுதியில் கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து சுமார் 100 யானைகள், கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிக்குள் வருகின்றன. ராகி பயிர் அறுவடையை குறி வைத்து வரக்கூடிய இந்த யானைகள் சுமார் 4 மாதங்கள் முகாமிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  விவசாய நிலங்களை சேதப்படுத்துகின்றன.
இதில் விவசாயிகளின், நெல். ராகி, தக்காளி, பீன்ஸ், கேரட், கரும்பு, தென்னை உள்ளிட்ட பல்வேறு வகையான விவசாய பயிர்கள் நாசம் ஆகின்றன. ஒவ்வொரு முறையும் யானைகள் வந்து செல்லும் இந்த 4 மாத காலங்களில் சுமார் 6 பேர் யானை தாக்கி இறப்பதும், ஓரிரு யானைகள் இறப்பதும் தொடர்ந்து வருகின்றன.

இதேபோல் யானைகள் தாக்கி ஆண்டுக்கு குறைந்த பட்சமாக 12 பேரும்,   அதிகமபட்சமாக 18 பேரும் பலியாகிறார்கள். கடந்த 2019ம் ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரையில் 25க்கும் மேற்பட்டவர்கள் யானை தாக்கி பலியாகி உள்ளனர். விளை நிலங்களுக்கு காவலுக்கு நிற்கும் விவசாயிகளும், வனப்பகுதியில் விறகு பொறுக்க செல்பவர்களும் இவ்வாறு அடிக்கடி யானை தாக்கி பலியாகும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ராகி என்பது யானைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவாகும். பயிரிடப்பட்டுள்ள ராகியில் பால் வந்தால் அதன் வாசனை சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் யானை அதை நுகர்ந்து கண்டுபிடித்து விடுகிறது. இதனால் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் வேதனையில் தத்தளிக்கின்றனர்.  யானைகள் கிராமத்திற்குள் வராமல் இருப்பதற்காக வனப்பகுதியை சுற்றி அகழி வெட்டும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டனர். ஆனாலும் விவசாயிகள் பலர் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காக அந்த அகழிகள் உள்ள பகுதிகளில் மண்ணை போட்டு நிரப்பி வருவதால் யானைகள் அந்த வழியாக வெகு சுலபமாக வந்து விடுகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் இந்த வனப்பகுதியில் உள்ள யானைகளால் ஏற்படும் பயிர் சேதம், உயிர் சேதத்தை விட, கர்நாடகாவில் இருந்து 4 மாதங்கள் வந்து முகாமிடும் யானைகளாலேயே சேதம் அதிகமாகிறது. கர்நாடக வனத்துறையினரோ அவர்கள் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, திரும்ப வரும் யானைகளை ரப்பர் குண்டு மூலமாக சுட்டு மீண்டும் தமிழக வனப்பகுதிக்கே அனுப்புகின்றனர். பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தமிழக வனப்பகுதியான கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிக்குள் வராமல் தடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறையினர் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் உள்ள யானைகள் அருகில் உள்ள ஊடேதுர்க்கம், சானமாவு மற்றும் பிற வனப்பகுதிக்குள் வராமல் இருக்க போதுமான அகழிகள் வெட்ட வேண்டும். மேலும் யானைகளுக்கு வனப்பகுதிக்குள் தேவையான தண்ணீர், உணவுகள் கிடைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே யானைகளால் ஏற்படும் பயிர் சேதங்கள், உயிர் சேதங்கள் குறையும் என்பது  சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

பாதிக்கப்படும் வன கிராமங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானைகளால் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. சூளகிரி சுற்று வட்டாரத்தில் சூளகிரி, கோபசந்திரம், பேரண்டப்பள்ளி, போடூர், போடூர்பள்ளம், உத்தனப்பள்ளி, நாயக்கனப்பள்ளி, சானமாவு, பீர்ஜேப்பள்ளி, பென்னிக்கல், ராயக்கோட்டை, யு.புரம், பாவாடரப்பட்டி, தேன்கனிக்கோட்டை சுற்று வட்டாரத்தில் ஜவளகிரி, தளி, அய்யூர், கேரட்டி என நூற்றுக்கணக்கான கிராமங்கள் யானைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த கிராமங்களில் ஆண்டுதோறும் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கரில் ராகி, சோளம், கம்பு, நெல், வாழை, அவரை, தக்காளி, பீன்ஸ், கோஸ், காலிபிளவர், உள்பட ஏராளமான பயிர்கள் சேதமடைகின்றன. இதன் மூலம் விவசாயிகள் கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்து வருகிறார்கள்.


Tags : Forest villages ,elephant attacks ,border ,Karnataka ,Tamil Nadu , Wild elephants,elephant attacks, Tamil Nadu, Karnataka border
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...