×

கொடைக்கானலில் நடுங்கும் குளிரிலும் விடுமுறை குதூகலம்: சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்

கொடைக்கானல்:  கொடைக்கானலில் கடுங்குளிர் நிலவியபோதும், பொங்கல் விடுமுறையை கொண்டாட சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் கடந்த 3 நாட்களாக அலைமோதி வருகிறது. பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட், தூண் பாறை, குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, டால்பின் நோஸ், மன்னவனூர் ஏரி உள்ளிட்ட இடங்களில் இயற்கை கொஞ்சும் அழகு காட்சிகளை சுற்றுலாப்பயணிகளின் கண்டு ரசித்தனர். இதுபோல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலையில் குதிரை சவாரி,  சைக்கிள் - டூவீலர் ரைடிங் செய்தும் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ந்தனர்.
 
கொடைக்கானலில் தற்போது உறைபனி சீசன் நிலவுவதால் பகல் பொழுதிலேயே குளிர் வாட்டி வதைத்தது. இருப்பினும் இந்த குளிரை பொருட்படுத்தாமல் அனைத்து இடங்களிலும் சுற்றுலாப்பயணிகள் குவிந்திருந்தனர். கடந்த 3 நாட்களாக சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பால் ஓட்டல்கள், விடுதிகள், கைடுகள், வாடகை கார்கள், சாலை வியாபாரிகள் என சுற்றுலா தொழில் புரிவோர் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். சுற்றுலாப்பயணிகள் வாகனங்கள் அதிகரிப்பால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்டநேரம் அணிவகுத்து காத்திருந்ததால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். எனவே கொடைக்கானலில் நிரந்தரமாக கூடுதல் பார்க்கிங் வசதி ஏற்படுத்துவதுடன், விடுமுறை காலங்களில் நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசாரை அதிகம் நியமிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Holidays ,Kodaikanal , Holidays,Kodaikanal,shaky,cold weather, Tourists piled on
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...