×

மதுரை அருகே மங்கி வரும் மண்பாண்ட தொழில்

* வாழ்வாதாரமின்றி தொழிலாளர்கள் தவிப்பு
* காக்க நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

பேரையூர்:  மதுரை அருகே பேரையூர் பகுதியில் நலிந்து வரும் மண்பாண்ட குடிசை தொழிலால் தொழிலாளர்கள் வறுமை பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இவர்களை காக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே சேடபட்டி, சிலைமலைப்பட்டி, டி.கல்லுப்பட்டி, வையூர், கொட்டாணிப்பட்டி, வி.சத்திரப்பட்டி, எழுமலை, சூலப்புரம், உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் மண்பாண்ட தொழிலை தொடர்ந்து செய்து வருகின்றனர். இப்பகுதியில் ஒருகாலத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இத்தொழிலை செய்து வந்தனர். ஆனால் தற்போது இத்தொழிலை சுமார் 300 குடும்பங்களே செய்து வருகின்றன. இதற்கு காரணம், இந்த மண்பாண்ட தொழில் நலிவடைந்து போனதால் பல குடும்பங்கள் கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், மதுரை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கும்பகோணம், மற்றும் வெளிமாநிலங்களுக்கு பிழைப்புத்தேடி ஊரை காலிசெய்து விட்டு சென்று விட்டனர்.

மண்பாண்ட குடிசை தொழிலை செய்து வந்தவர்களுக்கு, திமுக ஆட்சி காலத்தில் குடில் அமைத்து கொடுத்து, தொழில் பாதுகாப்பு, ஊக்குவிப்பு நடவடிக்கைகளும், கடனுதவியும் செய்யப்பட்டன. மேலும் தொழில் செய்யும் குடும்பங்களுக்கு செய்த மண்பாண்டங்கள் மழைக்கு நனையாமலும், உடைந்து போகாமலும் இருக்க அப்பகுதி மக்கள் பயனனைடையும் வகையிலும் அரசே செட் அமைத்தும் கொடுத்து ஊக்கப்படுத்தியது. ஆனால் தற்போது மண்பாண்ட தொழில் முற்றிலும் நலிவடைந்து வரும் வேளையில், இந்த தொழிலாளர்களை அரசு கண்டுகொள்வதில்லை. இதனால் வறுமைப்பிடியில் உள்ள இவர்கள் தற்போது பிழைப்பு தேடியும், ஊரைக்காலி செய்யும் செல்லும் நிலை உள்ளது. எனவே, புதைந்து வரும் மண்பாண்ட தொழிலை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சேடபட்டியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர் பெத்தனன் கூறுகையில், ‘‘எங்கள் பாரம்பரிய தொழிலே இந்த மண்பாண்டங்கள் செய்வதுதான். எனக்கும் வயதாகி விட்டதால் எனது மகனுக்கு இந்த தொழிலை கற்று கொடுத்துள்ளேன். ஆனால் தற்போதுள்ள விலைவாசி உயர்வால் எங்களது குடும்பம் இந்த தொழிலை மட்டுமே நம்பி வாழ முடியாமல் தவிக்கின்றது. எங்களை போன்ற நலிந்த தொழிலாளர்களுக்கு ஏதேனும் அரசு உதவி செய்தால், இருக்கின்ற தொழிலை விடாமல் பாதுகாக்க முடியும்’’ என்றார்.

தொழிலாளி ஆறுமுகம் கூகையில், ‘‘இப்போதெல்லாம் சிலிண்டர் அடுப்பு, சில்வர் பானைகள் வந்து விட்டன. இதனால் நாங்கள் செய்யும் மண்பானை சட்டிகள், அடுப்புகள், கோயில் திருவிழா காலங்கள், புதுமனை புகுவிழா, உள்ளிட்டவைகளுக்கு சாஸ்திரங்களுக்காகவே பயன்பட்டு வருகிறது. மேலும் கோயிலில் தீச்சட்டி, கை. கால், பாதம், தவிழ்ந்து ஓடும் பிள்ளைகள் உள்ளிட்ட மண்பொம்மைகள் திருவிழாக்காலங்களில் எங்களுக்கு கைகொடுக்கும். இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விருதுநகர், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளுக்கு அனுப்பி வைத்து விற்பனை செய்வோம். நலிவடைந்து வரும் இத்தொழிலை எங்களுக்கு பிறகு இளைஞர்கள் தொடர்ந்து செய்வார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது’’ என்றார்.

தொழிலாளி பெத்தனன் கூறுகையில், ‘‘இங்கு செய்யக்கூடிய காளை, முட்டுக்கிடாய், குதிரை, பொம்மைகள் உள்ளிட்டவைகளை திருவிழா காலங்களில் விற்பனை செய்கிறோம். மேலும் முக்கிய திருவிழாக்களுக்கு முத்தாலம்மன், கருப்பசாமி, குதிரை, உள்ளிட்ட சாமி சிலைகள் செய்து கொடுத்தும் வருகிறோம். ஆனால் தற்போதுள்ள சூழலில் இதற்கான மண்ணை கொண்டு வருவதற்கும், மண்பாண்டங்களை உற்பத்தி செய்யக்கூடிய செலவுகளும் அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது இந்த தொழில் மிகவும் நலிவடைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் எங்களை போன்ற தொழிலாளர்களுக்கு ஏதாவது வழிவகை செய்து உதவ வேண்டும்’’ என்றார்.

Tags : Madurai , Pottery industry,fading ,near Madurai
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...