×

இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் வணிகவரித்துறையில் 99 ஆயிரம் கோடி இலக்கை எட்டுவதில் சிக்கல்: மத்திய அரசின் மானியம் மூலம் அடைய திட்டம்

சென்னை,ஜன.19: தமிழக வணிகவரித்துறையில் நடப்பாண்டில் 99 ஆயிரம் கோடி இலக்கை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் மானியம் மூலம் அந்த இலக்கை அடைய வணிகவரித்துறை திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்குகள் சேவை வரி கடந்த 2017 ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதுவரை சரக்குகளுக்கு மட்டுமே வரி வசூலித்து வந்த தமிழக அரசு சேவை வரிக்கும் சேர்த்து வசூலித்து வருகிறது. இதில், ஒவ்வொரு வரிக்கும் மத்திய, மாநில அரசுகள் வருவாயை பிரித்து கொள்கிறது. இந்த ஜிஎஸ்டியை அமல்படுத்துவதால் பெரிதும் பாதிப்பு ஏற்படும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்தனர். ஆனால், ஆல்கஹால் மற்றும் எரிபொருட்கள் மூலம் கிடைக்கும் வரி வருவாய் தற்போது வரை தமிழக அரசை ஒரளவு காப்பாற்றி வருகிறது. இருப்பினும் வருவாய் இலக்கை அடைய முடியாமல் வணிகவரித்துறை தவித்து வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு மாதமும் வருவாய் இலக்கை எட்ட முடியாமல் மத்திய அரசிடம் மானியம் பெற்று அதன் மூலம் வருவாய் இலக்கை சரி செய்து வருகிறது. குறிப்பாக, கடந்த 2017-18ல் 73 ஆயிரம் கோடி வருவாய் வசூலிக்கப்பட்டது. இதில், 1,900 கோடி மத்திய அரசின் இழப்பு தொகையாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே போன்று, கடந்த 2018-19ல் 87,905 கோடி வரி வருவாய் வசூலிக்கப்பட்டது. இதற்கு, மத்திய அரசு சார்பில் 3151 கோடி மானியமாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நடப்பாண்டிலும் ஒவ்வொரு மாதமும் வரி வருவாய் இழப்பு மத்திய அரசிடம் மானியமாக ேகாரப்பட்டது. அதன்பயனாக 1,300 கோடி மானியமாக மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் 99 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், கடந்த டிசம்பர் வரை 60 ஆயிரம் கோடி வரை வருவாய் எட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், 30 ஆயிரம் கோடி வருவாய் இலக்கு அடையுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த வருவாய் இலக்கை அடையும் வகையில் ஆல்கஹால் மற்றும் எரிபொருள் மூலமும் கிடைக்கும் என்று வணிகவரித்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில்  வருவாய் இலக்கை அடைவதில் சிக்கல் ஏற்பட்டால் மத்திய அரசு மானியமும் பெறவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று வணிகவரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Tags : government ,state , Still, only 3 months, in the state of commerce
× RELATED ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு; 24,000...