×

பொங்கல் கொண்டாட்டத்திற்கு சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்ப துவங்கினர்: பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது

சென்னை: பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்ப துவங்கியுள்ளதால், பஸ், ரயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பலரும் கடந்த 12ம்தேதி இரவே சொந்த ஊர்களுக்கு புறப்பட துவங்கினர். இவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழங்கள் சார்பில் 30,120 பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் கூட்டநெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் 5 இடங்களிலிருந்து பஸ்கள் இயக்கப்பட்டது. இங்கு, மாநகரின் பல்வேறு இடங்களிலிருந்து சென்றவர்களின் வசதிக்காக எம்டிசி சார்பில் 310 இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்பட்டது.

இந்நிலையில் பொங்கல் கொண்டாட்டத்திற்காக, சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்கள், ரயில்கள், ஆம்னி பேருந்துகளில் வாயிலாக சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயணித்துள்ளனர். இதனால் கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி நகராட்சி பேருந்து நிலையம், கே.கே.நகர் மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம் ஆகிய  இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில்நிலையங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் இவ்வாறு சென்ற பலரும் மீண்டும் சென்னைக்கு திரும்ப துவங்கிவிட்டனர். இவர்களின் வசதிக்காக பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு கடந்த 16ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சேலம், மதுரை, திருச்சி, தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களிலிருந்து திருப்பூர் மற்றும் கோயம்புத்தூருக்கும், சேலம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, கரூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களிலிருந்து பெங்களூருக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக அனைத்து சாலைகளிலும் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

ஆங்காங்குள்ள சுங்கச்சாவடிகளில், ஒரே நேரத்தில் ஏராளமான பயணிகள் பயணித்த காரணத்தினால் வாகனங்கள் தேங்கி நின்றது. இதேபோல் பலஇடங்களில் மேம்பாலம் கட்டும் பணி நடப்பதாலும், வாகனங்கள் வேகமாக பயணிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அவை ஊர்ந்தவாறே சென்றது. இதையடுத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நெரிசல் மிகுந்த இடங்களில் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் வெளியூர் பஸ்கள் வரும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட 5 இடங்களில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பயணிகளிடத்தில் திருடர்கள் கைவரிசை காட்டக்கூடும் என்பதால், போலீசார் மைக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றனர். தொடர்ந்து இக்கூட்ட நெரிசல் 20ம் தேதி வரை நீடிக்கும் என்பதால், அதற்கான நடவடிக்கைகளில் போக்குவரத்து, போலீஸ், தீயணைப்பு நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags : celebration ,crowds ,Pongal ,Madras , For the Pongal celebration, the crowds are on the go, on the buses and trains
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்