தனியார் வேளாண் கல்லூரிகள் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உத்தரவு

சென்னை: தனியார் வேளாண் கல்லூரிகளின் கல்வி கட்டத்தை நிர்ணயம் செய்வதற்கான குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துருவை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி நியமித்துள்ளார். தனியார் தொழில்நுட்ப கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்கு உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழுவை அமைக்க வேண்டும் என்று கடந்த 2003ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தனியார் சுயநிதி பொறியல் கல்லூரிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றுக்கு கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த குழுக்கள் நிர்ணயம் செய்த கல்வி கட்டணம்தான் தற்போது சுயநிதி பொறியியல் கல்லூரிகளிலும், தனியார் சுயநிதி பள்ளிகளிலும் வசூலிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், அனைத்து வேளாண்மை படிப்புகளும், வேளாண்மை சார்ந்த படிப்புகளும் தொழில்நுட்ப படிப்புதான் என்று தமிழக அரசு கடந்த 2007 மே மாதம் அரசாணை பிறப்பித்தது.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்காக ஒரு குழுவை அமைக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 7ம் தேதி அரசாணை பிறப்பித்தது.இதையடுத்து, தனியார் வேளாண் கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கும் குழுவின் தலைவராக சென்னைஉயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துருவை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி நியமித்துள்ளார். இந்த கட்டண நிர்ணய குழுவில் உறுப்பினர் செயலர் மற்றும் 7 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர். இந்த குழு விரைவில் தனது பணியை தொடங்கவுள்ளது. நீதிபதி கே.சந்துரு 2006 முதல் 2013வரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தவர். இவரது பணிக்காலத்தில் 96 ஆயிரம் வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்து சாதனை படைத்தவர். இவரது தீப்புகளில் 1500 தீர்ப்புகள் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளாக கருதப்படுகிறது.


Tags : Sahi ,AP ,High Court ,Chandru ,colleges ,Private Agricultural Colleges , Private Agricultural Colleges, to determine tuition fees, iCort
× RELATED தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும்...