×

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் 4 ஏரிகளின் நீர் இருப்பு 6 டிஎம்சியாக உயர்ந்தது: 6 மாதங்களுக்கு விநியோகிக்க முடியும்பொதுப்பணித்துறை தகவல்

சென்னை: சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் 4 ஏரிகளின் நீர் இருப்பு 6 டிஎம்சியாக உள்ளது. இந்த நீர் இருப்பை கொண்டு 6 மாதங்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. 11 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த 4 ஏரிகள் வடகிழக்கு பருவமழையை நம்பி தான் உள்ளது. ஆனால், கடந்த 2018ல் வடகிழக்கு பருவமழை பொய்த்த நிலையில், 4 ஏரிகளில் நீர் மட்டம் உயரவில்லை. இதனால், சென்னை மாநகர் மற்றும் புறநகர் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக, சென்னை மாநகரில் தினமும் 650 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவை என்கிற நிலையில் 250 மில்லியன் லிட்டர் கூட விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கல் குவாரி, பாசனத்துக்கு பயன்படுத்தாத ஏரிகளில் இருந்து குடிநீருக்கு விநியோகிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நீரை கொண்டு சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 17ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த பருவமழை காரணமாக ஏரிகளின் நீர் மட்டம் ஒரளவு உயர்ந்துள்ளது. குறிப்பாக, 3231 மில்லியன் கன அடி கொண்ட பூண்டி ஏரியில் 1520 மில்லியன் கன அடியும், 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 72 மில்லியன் கன அடியும், 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2794 மில்லியன் கன அடியும், 3645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 1628 மில்லியன் கன அடி என ெமாத்தம் 4 ஏரிகளில் 6014 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தொடர்ந்து நீர் வந்து கொண்டிருக்கிறது. இதுவரை 4.5 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. அடுத்த மாதம் வரை தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, ஏரிகளின் நீர் மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 4 ஏரிகளில் 6 டிஎம்சி நீர் இருப்பு உள்ள நிலையில், 6 மாதங்கள் வரை சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Tags : lakes ,city ,Chennai , Drinking water requirement , Chennai Municipality, 4 lakes, water reserve
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 71.91 சதவீதம் நீர் இருப்பு..!!