×

வேளச்சேரி பிரதான சாலையில் ஆமை வேகத்தில் மேம்பால பணிகள்: வாகன ஓட்டிகள், மக்கள் கடும் அவதி

வேளச்சேரி பிரதான சாலையில் 3 மேம்பாலங்கள் அமைக்கும் பணியானது ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சென்னையில் புறநகர் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலை  உள்ளது. இந்த சாலை கிழக்கு தாம்பரத்தில் ரயில்வே பாதை அருகிலிருந்து துவங்கி, கிழக்கு தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், வேங்கைவாசல், மேடவாக்கம்,   ஜல்லடியான் பேட்டை, பள்ளிக்கரணை, வேளச்சேரி   குருநானக் கல்லூரி வழியாக சின்னமலை வரை செல்கிறது. இது, 16 கிலோ மீட்டர் தூர சாலை. இந்த சாலையை   ஒட்டி பல்வேறு   ஊராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை மற்றும் சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு சென்று வர இதுதான் முக்கிய சாலையாக உள்ளது. புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் குடியிருப்புகளும், தொழில் நிறுவனங்களும் பெருகி வருவதால், இந்த சாலையை தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகியதால், இந்த சாலையில்   போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, மேடவாக்கம் கூட்ரோடு சந்திப்பு, மேடவாக்கம் பஜார் அருகே இணையும் மாம்பாக்கம் பிரதான சாலை, பெரும்பாக்கம் பிரதான சாலை மற்றும் வேளச்சேரி விஜயநகர் பஸ்நிலையம் அருகே உள்ள தரமணி 100 அடி சாலை மற்றும் வேளச்சேரி பைபாஸ் சாலை இணைவதால் இந்த இடங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, கடந்த திமுக ஆட்சியின் போது இந்த இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகள் துவங்கின. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விறுவிறுப்பாக நடைபெற்ற மேம்பாலம் அமைக்கும் பணி, ஆட்சி மாறியதும் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மேடவாக்கம் கூட் ரோடு, மேடவாக்கம்-மவுன்ட் சாலை (பஜார்), வேளச்சேரி விஜயநகர் ஆகிய பகுதிகளில் மேம்பாலம் கட்டும் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினர் மீண்டும் துவக்கினர். அதில் வேளச்சேரி விஜயநகர் மேம்பாலத்துக்கு ₹108 கோடி ஒதுக்கப்பட்டது. மேடவாக்கம் கூட்ரோட்டில் பாலம் கட்ட 146 கோடி ஒதுக்கப்பட்டது. மேடவாக்கம் -மவுன்ட் சாலையில் பாலம் கட்ட ₹64 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த பாலங்கள் கட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கோடியை ஒதுக்கினாலும், பாலங்கள் முடிந்தபாடில்லை. தற்போது, இந்த பாலம் கட்ட கட்டுமானச் செலவு பலமடங்கு அதிகமாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த குறைபாடுகளுக்கு அரசின் கண்காணிப்பு குறைவு காரணமா? அல்லது காண்ட்ராக்டர்கள் மெத்தனமாக செயல்படுவது காரணமா? என்பது தெரியாமல் மக்கள் திணறி வருகின்றனர்.

ஐந்து ஆண்டுகள் ஆகியும்  இந்த 3 மேம்பாலம் கட்டும் பணியை தமிழக அரசு முடிக்காததால் அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்தை அடைந்து வருகின்றனர். மேம்பாலம் தொங்கு பாலமாக காட்சியளிக்கிறது. ஆமை வேகத்தில்   நடைபெறும் இப்பணியால் பள்ளி, கல்லூரிகள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் கால விரயத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மேம்பாலம் கட்டும் பணி 70 சதவீதம் கூட முடியவில்லை என என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த பகுதியில் சாலைகள் குறுகலாக இருப்பதால் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, வேளச்சேரி பிரதான சாலையில் மூன்று இடங்களில் நடக்கும் மேம்பால பணியை உயர் அதிகாரிகள் பார்வையிட்டு வேலையை உடனடியாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

நோயாளிகள் உயிருக்கு ஆபத்து
இப்பகுதியில் உள்ள உடல்நிலை சரியில்லாதவர்கள், விபத்துகளில் சிக்குபவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டு   வருகிறது. இதனால், பல நேரங்களில் ஆம்புலன்சில் அல்லது அவசர சிகிச்சைக்காக பல்வேறு வாகனங்களில் அழைத்துச் செல்லப்படும் நோயாளிகளின் உயிர்கள், இந்த மேம்பாலங்களை போலவே ‘அந்தரத்தில்’ தொங்குகின்றன.

திணறும் போக்குவரத்து போலீஸ்
சாலை ஓரங்களில் கிடக்கும் கம்பிகள், ஜல்லி கற்களால் புழுதி ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. குறிப்பாக வேலைக்கு செல்லும் காலை நேரத்திலும், மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் நேரத்திலும் போக்குவரத்து நெரிசலால் இந்த சாலைகள் திணறி வருகின்றன. போக்குவரத்து போலீசாரும் சாலை வசதி இல்லாததால் போக்குவரத்தை சரி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.

Tags : Motorists ,Velachery Main Road ,Main Road , Improvement works , Velachery, Main Road, Turtle Speed
× RELATED பொது இடத்தில் தகாத வார்த்தையால் பேசியவர் கைது