×

வழக்குகள் முடக்கத்தில் குற்றவாளிகள் குஷி டிஎன்ஏ சூப்பர் இம்போசிங் டெஸ்ட் தாமதம்

கோவை: தமிழகத்தில் தடயத்துறையின் ஆமை வேகத்தால் வழக்குகளின் விசாரணை நத்தை வேகத்தில் நகரும் நிலையிருக்கிறது. தமிழக போலீசில் டெக்னிக் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளை வழக்குகளில் போதுமான தடயம், ஆதாயம் கிடைக்காத நிலையில் வழக்கு விசாரணை இழுபறியில் இருப்பதாக தெரிகிறது. பல முக்கிய வழக்குகள், சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தடய அறிவியல் பிரிவை நம்பியிருக்கிறது. தமிழகத்தில் 4,198 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளது. டி.என்.ஏ. சூப்பர் இம்போசிங், டிஜிட்டல் இமேசிங் பிராசஸ், பார்மகாலஜி போன்ற சோதனைக்காக சென்னையில் உள்ள தலைமை தடய அறிவியல் ஆய்வக முடிவிற்காக அனைத்து மாவட்ட போலீசாரும் காத்திருக்கவேண்டியுள்ளது. எலும்பு, ரத்தம், உடல் பாகங்கள், மருந்து, போதை பொருட்களை சோதனைக்கு அனுப்பினால் முடிவு கிடைக்க ஒரு மாதத்திற்கு மேல் காத்திருக்கும் நிலையிருக்கிறது. இந்த தாமதத்தினால் குற்றவாளிகளை பிடித்து, நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.

கோவை, சேலம், மதுரை, திருச்சி, வேலூர், நெல்லை, ராமநாதபுரம், தஞ்சாவூர், விழுப்புரம் மண்டல தடயவியல் பகுப்பாய்வகங்களில் சூப்பர் ஸ்ெபஷாலிட்டி ஆய்வக வசதி அமைக்கும் திட்டம் பல ஆண்டாக இழுபறி நிலையில் இருக்கிறது. அயோன் ஸ்கேன் என அழைக்கப்படும் வெடி பொருள் மாதிரி சேகரிப்பு ஆய்வகம் மண்டல தடயத்துறையில் செயல்படுத்த 3 ஆண்டிற்கு முன் உத்தரவிடப்பட்டது. ஆனால் செயல்பாட்டிற்கு வரவில்லை. அயோன் ஸ்கேன் ஆய்வகத்தில் வெடி பொருள் வெடித்த நேரத்தில் அந்த இடத்தில் சேகரிக்கப்படும் ெபாருள், வெடி பொருளில் இருந்து சிதறிய பொருட்கள் போன்றவற்றை உடனடியாக அளவிட்டு கண்டறிய முடியும். பல்வேறு மாவட்டங்களில் வெடி விபத்தில் டெட்டனேட்டர், ஜெலட்டின், நைட்ரைடு போன்ற வெடி பொருட்களுக்கும், பட்டாசுக்கும் வித்தியாசம் காண முடியாமல் மண்டல தடய துறையினர் திணறுகின்றனர்.

சென்னை அலுவலகத்தில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து குவியும் டெஸ்டிங் சாம்பிள்களை பிரித்து பார்க்கவே பல நாட்களாகி விடுவதாக புகார் எழுந்துள்ளது. சைபர் கிரைம் போலீசில் ஆள் கடத்தல், கொலை மிரட்டல், ஆபாச பேச்சு, தீவிரவாதம் தொடர்பான பேச்சுகள் குறித்த புகார் வருகிறது. ஆனால் பேசும் நபர், அவரின் குரல் தொடர்பாக தெளிவான விவரம் தெரியாத நிலையிருக்கிறது. ஆவண புகார்கள் குறைந்து செல்போன், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் ஆபாச பேச்சு, மிரட்டல் பேச்சு தொடர்பாக ஆடியோ, வீடியோ தொடர்பான புகார்கள் அதிகமாகி விட்டது. இந்த புகார்களின் மீது போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய முடியாத நிலையிருக்கிறது. ஆதாரங்களை ஸ்பீச் சயின்ஸ் பாரன்சிக் லேப் (வாய்ஸ் லேப்) என்ற தடய குரலியல் ஆய்வகத்திற்கு அனுப்பி அதன் முடிவு கிடைத்தால் மட்டுமே எப்.ஐ.ஆர். பதிவு செய்ய முடியும். மண்டல அளவில் தடயவியல் துறையில் வாய்ஸ் லேப் கிடையாது. இதனால் சைபர் கிரைம் மற்றும் உள்ளூர் போலீசார் மிரட்டல் புகார்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய தயக்கம் காட்டுகின்றனர். மண்டல அளவில் வாய்ஸ் லேப் துவங்கும் திட்டமும் நிதியின்றி முடங்கிவிட்டது. 32 மொபைல் பாரன்சிக் லேப்பும் பல்வேறு மாவட்டங்களில் முறையாக இயங்குவதில்லை. தடயத்துறையினர் நேரடியாக களமிறங்கி துல்லிய ஆதாரங்களை சேகரிப்பது அரிதாகவே இருக்கிறது. போலீசார் ஆதாரங்களை சேகரித்து தடயவியல் ஆய்வகத்தில் ஒப்படைப்பது பரவலாக நடக்கிறது.
தடயவியல் துறையினர் கூறுகையில், ‘‘அடக்கம் செய்யப்பட்ட, எரிந்த சடலங்களில் இருந்து சேகரிக்கப்படும் எலும்புகளை வைத்து ஆணா, பெண்ணா, குழந்தையா, மனித எலும்பா, விலங்குகளின் எலும்பா போன்ற விவரங்களை தெரிந்து கொள்வதில் சிக்கல் இருக்கிறது. சில எலும்புகளை பல மாதங்கள் ஆய்வகத்தில் பாதுகாப்பாக வைக்கவேண்டியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் 30க்கும் மேற்பட்ட சடலங்களின் எலும்புகள் டி.என்.ஏ. சோதனைக்காக சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இவற்றை -20 டிகிரி ெசல்சியஸ் குளிர்பதன நிலையில் பாதுகாக்க 2 டி.என்.ஏ. குளிர் அறை தேவைப்படுகிறது. ஆனால் இதற்கான வசதிகள் இல்லாமல் உள்ளூர் அரசு மருத்துவமனைகளின் பிரேத பரிசோதனை கிடங்கில் வைக்கப்படுகிறது. குறிப்பிட்ட சில நாட்களில் டி.என்.ஏ. செய்ய வேண்டிய எலும்புகள் பெறப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. போதை மருந்து, எளிதில் ஆவியாகும் கரிம பொருள், விஷப்பொருட்கள் போன்றவற்றை அடையாளம் காண வாயு நிறவியல் பிரிவு அமைக்கும் திட்டம் உள்ளது. தொழில் நுட்ப ரீதியான ஆதாரங்கள் மட்டுமே வழக்கின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது. இதற்கேற்ப தடய துறையை மேம்படுத்தவேண்டியுள்ளது’’ என்றனர்.

சினிமா பாணி கொலை
தமிழகத்தில் சந்தேக மரணங்கள் பெரும்பாலும் தற்கொலை வழக்காக (இந்திய தண்டனை சட்டம் பிரிவு 174) பதிவு செய்யப்படுகிறது. தடயவியல் துறையின் ஆய்வில் உடற்கூறு ஆய்வில் (சீரம் டெஸ்ட்) கிடைக்கும் முடிவின் அடிப்படையில் வழக்கு பிரிவுகளில் மாற்றம் செய்யப்படுகிறது. கோவையில் தூக்கு போட்டு இறந்த வாலிபரின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் பெறப்பட்டது. விசாரணையில் எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில், இறந்தவரின் உடல் பாகங்கள் தடய ஆய்வகத்தில் சோதனையிடப்பட்டது. இதில் நுரையீரலில் தேங்கிய காற்றின் அழுத்த அளவை வைத்து தற்கொலை இறப்பு அல்ல என தடயவியல் துறை ரிப்போர்ட் வழங்கியது. போலீஸ் விசாரணையில், பணம் கேட்டு மிரட்டிய ரவுடி, வாலிபரை கத்தி காட்டி மிரட்டி பேனில் தூக்கு மாட்டி நாற்காலியில் இருந்து குதிக்க வைத்து சினிமா பாணியில் நூதனமாக கொன்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு தடயவியல் துறையின் சாதனைக்கு சான்றாக உள்ளது.

கை தராத கைரேகை
ஆதார் வந்த பின்னர் கைரேகை பதிவுத்துறையின் பணி எளிதாகி விட்டதாக கருதப்பட்டது. போலீசின் சி.சி.டி.என்.எஸ். என்ற குற்றம் மற்றும் குற்றவாளிகள் வலைபின்னல் வெப்சைட்டில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் கைரேகை பதிவாகியுள்ளது. ஆனால் குற்ற வழக்குகளில் கைரேகை மூலமாக துப்பு துலங்குவது அரிதாகி விட்டது. கொலை, கொலை நடந்த இடங்களுக்கு போலீசார் தாமதமாக செல்வதாலும், வேடிக்கை பார்ப்பவர்கள் கண்ட இடங்களில் கை வைப்பதாலும் விரல் பதிவு துல்லியமாக பெற முடியாத நிலையிருக்கிறது. சம்பவம் நடந்த இடத்தில் குற்றவாளிகளின் கைரேகைக்கு பதிலாக விசாரணைக்கு சென்ற போலீசாரின் கைரேகை பதிவுகளை பெற்று விசாரித்த வேடிக்கையும் நடந்துள்ளது. கண்ணாடி மற்றும் மென்மையான சமதளத்தில் பதிவாகும் கைரேகைகளை மட்டுமே ஆதாரமாக ஏற்க முடியும் என்ற நிலையிருக்கிறது. பெரும்பாலான திருடர்கள் கிளவுஸ் அணிந்து திருடுவதால் கைரேகை பதிவு பயனில்லாமல் போய் விட்டது.

Tags : Prosecutors ,DNA , Cases are crippled, criminals, DNA super, imposing test, delay
× RELATED வழக்கறிஞர்கள் சாலை மறியல்