×

பிஸ்ட் பால்: தமிழ்நாடு சாம்பியன்

சென்னை: குண்டூரில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் பிஸ்ட்பால் போட்டியில் சிறுவர்கள், சிறுமிகள் என இரண்டு பிரிவுகளிலும் தமிழ்நாடு அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன. தேசிய அளவிலான 10வது ஜூனியர் பிஸ்ட்பால் போட்டி ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் மங்களகிரியில் நடந்தது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உட்பட 16 மாநிலங்களில் இருந்து அணிகள் பங்கேற்றன. போட்டிகள் சிறுவர், சிறுமிகள் என 2 பிரிவுகளாக நடந்தது. சிறுவர்களுக்கான இறுதிப் போட்டியில் தமிழ்நாடு-புதுச்சேரி அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு 11-8, 11-6 என்ற நேர்செட்களில் புதுச்சேரி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. முன்னதாக நடைபெற்ற 3, 4வது இடங்களுக்கான போட்டியில் தெலங்கானா அணி கேரளாவை வீழ்த்தி 3வது இடத்தை பிடித்தது.

சிறுமிகளுக்கான இறுதிப் போட்டியில் தமிழ்நாடு-கேரளா அணிகள் விளையாடின. அதில் தமிழ்நாடு 3-11, 12-10, 11-9 என்ற செட்களில் கேரளாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக நடந்த 3, 4வது இடங்களுக்கான போட்டியில் தெலங்கானா அணி ஆந்திராவை வென்று 3வது இடத்தை பெற்றது. சாம்பியன் பட்டம் வென்று சென்னை திரும்பிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு பிஸ்ட்பால் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Tags : Tamil Nadu Champion ,Tamil Nadu , Fist Ball, Tamil Nadu, Champion
× RELATED தமிழக சட்டப்பேரவை கூட்டம் முடித்து வைப்பு