×

மோடி அரசு கியரை மாற்றிவிட்டது குடிமக்கள் பதிவேடு பற்றி பேசாமல் மக்கள்தொகை பதிவு பற்றி பேசுகிறது: ப.சிதம்பரம் பேட்டி

கொல்கத்தா: ‘அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு தோல்வியடைந்த பின், மோடி அரசு உடனடியாக கியரை மாற்றி, மக்கள் தொகை பதிவேடு பற்றி பேசுகிறது,’ என ப.சிதம்பரம் கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) என்று வேறொன்றும் இல்லை; மாறுவேடத்தில் உள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி). எங்கள் நோக்கம் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ), என்பிஆர்-ஐ எதிர்த்து போராடுவதும், இதற்கு எதிராக மக்கள் கருத்துக்களை திரட்டுவதும்தான். என்பிஆர் பணியை ஏப்ரல் முதல் தொடங்குவதற்கு ஒப்புக்கொள்ள மாட்டோம் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு தோல்வியடைந்த பின், மோடி அரசு உடனடியாக கியரை மாற்றி, மக்கள் தொகை பதிவேடு பற்றி பேசுகிறது. குடியுரிமை திருத்த சட்டம் அரசியல் சாசனப்படி செல்லுமா என்ற விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. நாங்கள் என்ஆர்சி, சிஏஏ.க்கு எதிராக போராடுகிறோம். சில நேரங்களில் ஒன்றாகவும், சில நேரங்களில் வேறு விதமாகவும் போராடுகிறோம். என்பிஆர், என்ஆர்சி மற்றும் சிஏஏ-வுக்கு எதிராக போராடும் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். எதிர்க்கட்சிகளின் பலத்தை அளவிட பாஜ தவறிவிட்டது. கடந்து செல்லும் மேகம் போல் நினைத்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : government ,Modi ,gear talks , Modi government ,population registration,talking about, civic record,P Chidambaram Interview
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...