×

சென்னையில் நாளை முதல் பிரிமீயர் பேட்மின்டன் லீக்

சென்னை: பிரிமியர் பேட்மின்டன் லீக் (பிபிஎல்) தொடரின் 5வது சீசன் சென்னையில் நாளை தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பு,  கோப்பை அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேட்மின்டன் வீரர்கள்   சாய் பிரனீத்(பெங்களூர்),  லக்‌ஷயா சென் (சென்னை), சாத்விக் சாய்ராஜ் (சென்னை),   கிறிஸ்டினா பீட்டர்சன் (லக்னோ),  சங்கர் முத்துசாமி (சென்னை),  தாய்லாந்தைச் சேர்ந்த தனானங் சக் (நார்த்ஈஸ்டர்ன்) உட்பட பலர் பங்கேற்றனர். இத்தொடரை இந்திய டென்னிஸ் சங்கம், ஸ்போர்ட்ஸ் லைவ் நிறுவனம் இணைந்து நடத்துகின்றன. நிகழ்ச்சியில்  பேசிய ஸ்போர்ட்ஸ் லைவ் செயல் இயக்குநர் பிரசாத் மன்கிபூடி, ‘இந்த ஆண்டு போட்டிகள் சென்னை, லக்னோ, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெறும்.

மொத்தம் 24 போட்டிகள் 21 நாட்கள் நடக்கும்.  நடப்பு சாம்பியன் பெங்களூர் ராப்டர்ஸ் கேப்டனாக சாய் பிரனீத் தொடர்கிறார். சென்னை சூப்பர் ஸ்டார்சில் லக்‌ஷயா சென், சாத்விக் சாய்ராஜ் ஆகியோர் உள்ளனர். உலக சாம்பியன் பி.வி.சிந்து  இப்போது ஐதராபாத் ஹன்டர்ஸ் அணியில் தொடருவார்’ என்றார். அவாதே வாரியர்ஸ் (லக்னோ), பெங்களூர் ராப்டர்ஸ், மும்பை ராக்கர்ஸ், ஐதராபாத் ஹன்டர்ஸ்,  சென்னை சூப்பர் ஸ்டார்ஸ், நார்த்ஈஸ்டர்ன் வாரியர்ஸ், புனே 7ஏஸ் அணிகள் களமிறங்குகின்றன. மொத்த பரிசுத் தொகை ₹6 கோடி. நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.


Tags : Chennai ,Premier Badminton League , Premier,Badminton League, tomorrow, Chennai
× RELATED சென்னையில் 4 பேரை வெட்டிய ரவுடி கும்பல் கைது