×

நந்தனம், கிண்டி, சின்னமலை நிலையங்களுக்கும் விரிவாக்கம் வருடத்தில் 6 ஆயிரம் இ-பைக்குகளை அறிமுகப்படுத்த மெட்ரோ நிர்வாகம் திட்டம்

சென்னை: மெட்ரோ ரயில் நிர்வாகம் இ-பைக் சேவையை நந்தனம், கிண்டி, சின்னமலை ஆகிய மூன்று நிலையங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ சேவையையும், 5 நிலையங்களில் ஷேர் டாக்சி சேவையையும், 15 நிலையங்களில் வாகன இணைப்பு சேவையையும் செயல்படுத்தி வருகிறது. இதேபோல், பசுமை பயணத்தை முன்னிலைப்படுத்தி சைக்கிள் சேவை, இ-பைக் திட்டத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியது.

இந்தநிலையில், கடந்த மாதம் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ‘flyy’ என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து பயணிகளின் வசதிக்காக நிமிடத்திற்கு 1 ரூபாய் கட்டணத்தில் இ-பைக் சேவையை அறிமுகப்படுத்தியது. இச்சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. நாள் தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் இச்சேவையை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இச்சேவையை மேற்கொண்டு விரிவுபடுத்த நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி, எந்தெந்த நிலையங்களில் சேவையை தொடங்கலாம் என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில், நந்தனம், கிண்டி, சின்னமலை ஆகிய மூன்று நிலையங்களில் இ-பைக் சேவையை மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. பசுமையை உணர்த்தும் வகையில் இருசக்கர வாகனம் முழுவதும் பச்சை நிறம் பூசப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இச்சேவையை பயணிகள் பயன்படுத்திகொள்ளலாம். நிமிடத்திற்கு 1 ரூபாய் கட்டணம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஒருவருடத்திற்குள் 6 ஆயிரம் இ-பைக்குகளை அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Expansion ,Kindi ,Nandanam ,stations ,administration ,Metro , Nandanam, Kindi, Chinmalai Station, Expansion, Year, 6 Thousand, E-Bike, Metro Administration, Project
× RELATED சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது