×

இரவில் மட்டும் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் நடப்பது ஏன்?

* துபாய் ஊழியர்கள் சுறுசுறுப்பு
* பரபரப்பு தகவல்கள்

சென்னை: ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் அனைத்தும் இரவு நேரங்களில் மட்டுமே நடப்பது ஏன் என்பது குறித்து தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்கு ரூ.50.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து ஜெயலலிதா நினைவு மண்டப கட்டுமான பணிக்கு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அமைக்கப்படும் கட்டுமான பணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2018 மே 7ம் தேதி அடிக்கல் நாட்டினார். இதைதொடர்ந்து, அன்றைய தினத்தில் இருந்து உடனடியாக கட்டுமான பணி தொடங்கப்பட்டது. தொடர்ந்து இரவு, பகலாக கட்டுமான பணி நடந்து வருகிறது. கட்டுமான பணியில் 10 பகுதி வேலையில் 8 பகுதி வேலை முடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நடைபாதை, வாகன நிறுத்தம் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. அருங்காட்சியகம், அறிவுசார் மையம் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில், மெயின் கட்டிடத்தில் சூப்பர்ஸ்டெக்சர் வடிவமைப்பு மட்டும் அமைக்கப்படுகிறது. அதாவது, பீனிக்ஸ் பறவை தோற்றம் 15 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது. இறக்கை மட்டும் 2 பக்கமும் 21 மீட்டர் வரை அமைக்கப்படுகிறது. இதற்காக, துபாயில் இருந்து கப்பல் மூலம் கட்டுமான பொருட்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்த பீனிக்ஸ் பறவை இறகை பொருத்தும் பணி மேற்க்கொள்ள துபாயில் இருந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம் சூப்பர்ஸ்டெக்சர் வடிவமைப்புடன் கூடிய பீனிக்ஸ் பறவை இறக்கை பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு, பொருத்தப்பட்ட ஹேண்டில் லிவர் இணைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளுக்கு ஒரே மாதிரியான காலசூழ்நிலை இருக்க வேண்டும். ஆனால், பகல் நேரங்களில் இந்த சூழல் இருப்பதில்லை. இதனால், இரவு நேரங்களில் மட்டுமே பீனிக்ஸ் பறவை இறக்கை பொருத்தும் பணி நடந்து வருகிறது.

அப்போது தான் அந்த கான்கிரீட் இறுக்கம் ஏற்படும் என்பதால் பீனிக்ஸ் பறவை இறக்கை பொருத்தப்பட்டு வருகிறது. இப்பணிகள் இரண்டு கட்டமாக நடக்கிறது. ஒரு கட்டப்பணிகள் முழுவதுமாக முடிந்து விட்டது. இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக இறக்கை பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை பொதுப்பணித்துறை சார்பில் இது போன்ற தொழில்நுட்ப பணிகள் மேற்கொண்டதில்லை. எனவே, இப்பணிகளை வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இப்பணிகளை முடித்து பிப்ரவரி முதல் வாரத்துக்குள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பேரில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தற்போது வரை 85 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் பிப்ரவரி 24ம் தேதியன்று ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படவுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Jayalalithaa , t night, Jayalalithaa memorial, construction work, going on, why?
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...