×

புதுச்சேரி எம்.எல்.ஏ தனவேலு மகன் இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்...:காங்கிரஸ் கட்சி நடவடிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு மகன் அசோக் ஷிண்டே இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தனது தந்தை தனவேலுவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக புதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் ஊழல் செய்வதாகவும், மிக மோசமான ஆட்சி புதுச்சேரியில் நடக்கிறது என்றும் தனவேலு எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியிருந்தார்.

அதனையடுத்து தனவேலு எம்.எல்.ஏ.வின் புகாரை காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் ஒன்றிணைந்து எதிர்த்தனர். எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமியுடன் இணைந்து ஆட்சியை மாற்றம் செய்ய தனவேலு முயற்சிக்கிறார் என்று அவர் மீது குற்றம் சாட்டினார். மேலும் பாஜக-வின் ஏஜெண்டாக செயல்படுகிறார் என தனவேலுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விமர்சித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தனவேலு எம்.எல்.ஏ.வை அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஒப்புதலுடன் சஸ்பெண்டு செய்வதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.

மேலும் தனவேலுவிடம் இதுதொடர்பாக விளக்கம் கேட்கப்படும். கட்சி விதிமுறைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை குழு அவரின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். இந்த நிலையில் தனது தந்தை தனவேலுவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எம்.எல்.ஏ தனவேலு மகன் அசோக் ஷிண்டே கருத்துக்களை பதிவு செய்து உள்ளார். இதனால் தனவேலுவின் மகன் அசோக் ஷிண்டேவை சஸ்பெண்ட் செய்ய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஆபிரகாம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Youth Congress ,Puducherry MLA ,Congress ,MLA ,Thanavelu ,Puducherry , Puducherry ,Congress, MLA Thanavelu, son , Youth Congress
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...