×

ரேலியா அணை நிரம்பியும் பயனில்லை விலை கொடுத்து குடிநீர் வாங்கும் குன்னூர் மக்கள்

*சீராக விநியோகிக்க நகராட்சிக்கு கோரிக்கை

குன்னூர் : நீலகிரி மாவட்டம் குன்னுார் நகரில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய அணையான ரேலியா அணை இருந்து வருகிறது.  43.5 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையில் இருந்து  தண்ணீர் குன்னூர்  நகரின் உள்ள குடியிருப்பு  பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. வறட்சி காலங்களில் தண்ணீர் அளவு 12 அடிக்கும் குறைவாகவே இருந்தது. இதனால், மக்கள் தண்ணீரை தேடி பல கி.மீ. தொலைவில் உள்ள நீரோடைகளில் இருந்து வாகனங்கள் மூலமாகவும், தள்ளுவண்டி மூலமாகவும் தண்ணீர் கொண்டு வந்து பயன்படுத்தி வந்தனர்.  

நகராட்சி சார்பில்  15 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை சுழற்சி அடிப்படையில், நகருக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர்  மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே  குடிநீர் விநியோகிக்கப்பட்டது.  இதனால் மக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கி வந்தனர். கடந்த 3 மாதமாக பெய்த மழை காரணமாக ரேலியா அணை நிரம்பியது. இருப்பினும் சீரான  குடிநீர்  விநியோகம் செய்ய நகராட்சியில் முறையான கட்டமைப்பு இல்லாமல் உள்ளது. தண்ணீர் இருந்தும்  15 நாட்களுக்கு  ஒரு முறை மட்டுமே விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் குன்னூர் நகரில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரூ.450 முதல் ரூ.600 வரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மார்க்கெட் பகுதியில் உள்ள இறைச்சி கடைகள் மற்றும் மீன் கடைகளில் தண்ணீர் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் விரைவில் முறையாக தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்கெட் கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Coonoor ,Roliya Dam , Roliya Dam,Coonoor ,Drinking water
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...