×

தனுஷ்கோடி அரிச்சல் முனை கடலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

*கடலில் ஆபத்தான விளையாட்டு: தடுத்த மரைன் போலீசார்

ராமேஸ்வரம் : பொங்கல் விடுமுறையையொட்டி தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் ஆபத்தான முறையில் கடலில் இறங்கி விளையாடுவதை மரைன் போலீசார் தடுத்து நிறுத்தினர். ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகளும், யாத்ரீகர்களும் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை பார்க்கச் செல்கின்றனர். அரிச்சல் முனையில் பாக்ஜலசந்தி கடலும் மன்னார் வளைகுடா கடலும் சந்திக்கும் இடத்தில் கடலில் இறங்கி குளிக்கின்றனர். கால்களை நனைத்து விளையாடுகின்றனர்.

ஆபத்து நிறைந்த அரிச்சல்முனை கடல் பகுதியில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர். பொங்கல் நாளில்கூட மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கியபோது அருகிலிருந்த மீனவர்களால் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு ஆம்புலன்சில் போகும் போதே உயிரிழந்த சம்பவம் நடைபெற்றது. போலீசார் மற்றும் மீனவர்கள் எச்சரிக்கையையும் மீறியதால் கடலில் மூழ்கி பலியாகும் நிலை ஏற்பட்டது. அரிச்சல் முனை கடல் பகுதியில் கடலில் இறங்க வேண்டாம் என இப்பகுதி மீனவர்கள், போலீசாரும் எச்சரித்தாலும் சுற்றுலா பயணிகள் இதனை பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. போலீசாரால் கடுமையான நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை உள்ளது.

இதனால் விதிவிட்ட வழி என்று சுற்றுலா பயணிகளை கடலில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை செய்வதுடன் நிறுத்திக்கொள்கின்றனர். இந்நிலையில் பொங்கல் விடுமுறை நாளான நேற்றும் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் கார்களில் சென்றனர். இதில் பெண்கள், சிறுவர்கள் என பலரும் கடலில் இறங்கி கால்களை நனைத்தபடி விளையாடினர். குளிக்கவும் முயற்சி செய்தனர். அரிச்சல் முனையில் பணியில் இருந்த 20க்கும் மேற்பட்ட மரைன் போலீசார் கடலில் இறங்கிய சுற்றுலா பயணிகளை எச்சரித்து கடலில் இருந்து அப்புறப்படுத்தியதுடன் ஆபத்தை விளைவிக்கும் கடல் பகுதி என்பதையும் அவர்களிடம் தெரிவித்தனர். சுற்றுலா பயணிகள் ஆர்வம மிகுதியால் கடலில் இறங்குவதை தடுக்க சில இடங்களில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவது பெருமளவில் தடுக்கப்பட்டது.


Tags : Dhanushkodi ,sea ,Rameshwaram Dhanushkodi Arichalmunai Tourist , Dhanushkodi ,Rameshwaram ,Arichalmunai ,Tourist , Pongal Holidays
× RELATED கடலாடி பகுதியில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்