×

14 பெட்டிகளுடன் இயங்குவதால் வருவாய் இழப்பு கொல்லம் - சென்னை எக்ஸ்பிரசில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படுமா?

*பயணிகள் எதிர்பார்ப்பு

தென்காசி : கொல்லம் - சென்னை எக்ஸ்பிரஸ், 14 பெட்டிகளுடன் இயங்குவதால் தெற்கு  ரயில்வேக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த ரயிலில்  செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு கூடுதலாக 9 பெட்டிகள் வரை இணைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் வலியுறுத்தி உள்ளனர். கேரள  மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னைக்கு 40 ஆண்டுகளுக்கு மேலாக ரயில் சேவை  இருந்து வருகிறது. துவக்கத்தில் மீட்டர்கேஜ் பாதையில் இந்த ரயில்  இயக்கப்பட்டு வந்த நிலையில் 2018ம் ஆண்டு முதல் அகல ரயில் பாதையில்  இயங்குகிறது. கொல்லத்தில் காலை 11.55 மணிக்கு புறப்படும் கொல்லம் - சென்னை  விரைவு ரயில் மாலை 3.05 மணிக்கு செங்கோட்டை வந்தடைகிறது. 5 நிமிடங்களில்  அங்கிருந்து புறப்பட்டு 3.23 மணிக்கு தென்காசி வருகிறது. தொடர்ந்து  இங்கிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை எழும்பூரை  சென்றடைகிறது.

கேரளா மற்றும் தமிழகத்தின் பல முக்கிய நகரங்களை  சென்னையுடன் இணைக்கும் ரயிலாக இது திகழ்கிறது. இருப்பினும் இந்த ரயில்,  தற்போது  வெறும் 14 பெட்டிகள் மட்டுமே கொண்டு இயக்கப்படுகிறது. அதாவது  மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் 2, சாதாரண படுக்கை வசதி உள்ள பெட்டிகள் 8,  முன்பதிவு வசதி இல்லாத பெட்டிகள் 2, லக்கேஜ், பெண்கள் மற்றும் ரயில்  காப்பாளர் ஆகியோருக்கான பெட்டிகள் 2 என மொத்தம் 14 பெட்டிகள் மட்டுமே  இணைக்கப்பட்டுள்ளன.
 நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி, பொதிகை  எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பிற விரைவு ரயில்களில் 23 பெட்டிகள் இணைக்கப்பட்டு  சென்னை செல்லும் நிலையில் கொல்லம் விரைவு ரயில் 14 பெட்டிகளுடன்  இயக்கப்படுவதால் தினமும் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு லட்சக்கணக்கில்  வருவாய் இழப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

 தற்போதுள்ள  நிலையில் 2ம் வகுப்பு ஏசி பெட்டி ஒன்றும், 3ம் வகுப்பு ஏசி பெட்டி  இரண்டும்,  சாதாரண படுக்கை வசதியுள்ள பெட்டிகள் நான்கும்,  இரண்டு  முன்பதிவில்லாத பெட்டிகளும் சேர்த்து மொத்தம் ஒன்பது பெட்டிகள் வரை  கூடுதலாக கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்க வாய்ப்புள்ளது. பொதிகை  எக்ஸ்பிரஸ், மற்றும் நாகர்கோவில் - மும்பை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி ஹவுரா  எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள், நவீன ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் கூடிய  எல்எச்பி பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயில்களில்  ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பெட்டிகளை கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில்  பயன்படுத்தி கொள்ள அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இதனை ரயில்வே நிர்வாகம்  பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி ரயில் பயணிகளின்  எதிர்பார்ப்பாக உள்ளது.

மலைப்பாதை காரணமா?

கொல்லம்  - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், 14 பெட்டிகளுடன் இயக்கப்படுவதற்கு, மலைப்பாதை முக்கிய காரணமாக உள்ளது. வழக்கமான ரயில் பாதைகளில் ரயில்கள்  இயக்கப்படுவதற்கும்,  மலைப்பாதையில் ரயில்கள் இயக்கப்படுவதற்கும்  பல  தொழில்நுட்ப வேறுபாடுகள் உள்ளது. ரயில்வேயை பொருத்தவரை ஒரு அடி உயரமான  இடத்திற்கு தண்டவாளம் அமைக்க வேண்டுமெனில் 80 அடிகளுக்கு முன்பே உயரத்தைக்  கூட்ட ஆரம்பித்து விடுவர்.  இதனை டிரைவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில்  தண்டவாளங்களின் ஓரங்களில் அளவும் குறித்து வைக்கப்பட்டிருக்கும். மேலும்  அம்புக்குறியை வைத்து ஏற்றமா அல்லது இறக்கமா என்பதும் தெரிய வரும்.

மலைப்பாதையில்  தண்டவாளத்தை  40 அடிக்குள்ளாகவே  சில இடங்களில் ஒரு அடி உயரத்தை உயர்த்த  அல்லது தாழ்த்த  வேண்டிய நிலை இருக்கும். இதனால் மலைப்பாதை தண்டவாளங்கள்,  கூடுதல் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். மேலும் அதிக திறனுடைய இன்ஜினும்  பொருத்தப்படும். கொல்லம் எக்ஸ்பிரஸ், செங்கோட்டையில் இருந்து  கொல்லம் வரை இரு இன்ஜின்கள் மூலம் இழுக்கப்படுகிறது. அதாவது முன்பக்கம் ஒரு  இன்ஜினும்,  பின்பக்கம் ஒரு இன்ஜினும்   பொருத்தப்படுகிறது.  

முன்பக்க  இன்ஜின் பெட்டிகளை இழுத்து செல்லும் போது பின்பக்க இன்ஜின், உயரமான  பகுதிக்கு செல்ல உந்தித்தள்ளும் வகையிலும்,  தாழ்வான பகுதியில்  செல்லும்போது ரயில் பெட்டிகளை இழுத்து பிடித்து வைக்கும் வகையிலும்  தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இன்ஜின்கள் பேங்கர் இன்ஜின்  என்று அழைக்கப்படுகிறது.  14 பெட்டிகளுக்கே மலைப்பாதையில் செல்ல 2  இன்ஜின்கள் பொருத்த வேண்டிய நிலை இருப்பதால் கூடுதல் பெட்டிகளை இணைக்க  முடியாத சூழல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரயில்வே அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?

கொல்லம்  முதல் செங்கோட்டை வரையிலான நான்கு மணி நேரம் மட்டுமே  மலைப்பாதையில்  இயக்கப்படுகிறது.  செங்கோட்டை முதல் சென்னை வரையிலும் சமதளத்திலேயே  பயணிக்கிறது.  கொல்லத்தில் இருந்து செங்கோட்டை வரை 14 பெட்டிகளுடன்  இயக்கப்படும், அதேவேளையில் செங்கோட்டையில் இருந்து மேலும் ஒன்பது பெட்டிகளை  இணைத்து சென்னைக்கு 23 பெட்டிகளுடன் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.   இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை  விடுத்தும் இதுவரை கண்டுகொள்ளப்படவில்லை. 9 பெட்டிகளை இணைக்கும்போது  தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயன்பெறுவர். வருவாயும்  அதிகரிக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இக்கோரிக்கை மீது உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்பதே தென்காசி மாவட்ட பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Kollam ,Coaches ,loss , Kollam,Chennai Express,loss ,Coaches,
× RELATED பாண்டியா பாவம்…தேற்றுகிறார் போலார்டு