×

7,100 கோடி முதலீடு மூலம் 5 ஆண்டில் இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு வேலை: அமேசான் நிறுவனர் உறுதி

புதுடெல்லி: அமேசான் நிறுவனம் மேற்கொள்ள உள்ள 7,100 கோடி முதலீட்டால், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார். அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், ‘‘இந்தியாவில் நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள சிறு, குறு தொழில்களை ஆன்லைன் மயமாக்கும் வகையில், 100 கோடி டாலர் (சுமார் 7,100 கோடி) முதலீடு செய்யப்படும். இதன்மூலம் 2025ல்  71,000 கோடி மதிப்பிலான இந்திய பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும்’’ என தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில்பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ‘‘அமேசான் முதலீட்டால் இந்தியாவுக்கு எந்த உதவியும் செய்ய முற்படவில்லை. அவர்களின் முதலீடு நஷ்டம் அடைந்தால் அதை நாம் ஈடுசெய்ய வேண்டிவரும்’’ என கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜெப் பெசோஸ், அமேசான் இணையதளத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய பொருட்களை உலகம் முழுவதிலும் அமேசான் மூலம் ஏற்றுமதி செய்ய முடியும். இதன்மூலம் 2025ம் ஆண்டுக்குள் ஏற்றுமதி மதிப்பை 1,000 கோடி டாலராக அதிகரிக்க முடியும். அது மட்டுமின்றி, இந்தியாவில் அமேசான் மேற்கொள்ள உள்ள 100 கோடி டாலர் முதலீட்டால், அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அமேசான் நிறுவனத்தின் இந்த முயற்சியானது, இந்திய மக்களுக்கு வேலை வாய்ப்பு பெறவும், திறன் மேம்பாடு, தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் போன்றவற்றுக்கு காரணமாக அமையும். சுமார் 5.5 லட்சம் சிறு, குறு தொழில்துறையினர், நடுத்தர தொழில்களில் ஈடுபடுவோருக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் நான் ஒவ்வொரு முறை வரும்போதும், இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன். இந்திய மக்களின் எல்லையில்லாத ஆற்றல், புதுமைகள் என்னை கவர்ந்திருக்கின்றன என கூறியுள்ளார்.

பியூஷ்கோயல் திடீர் பல்டி
அமேசான் நிறுவன முதலீட்டால் பயன் எதுவும் இல்லை என்று கூறியிருந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இதற்கு நேற்று மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘அமேசான் பற்றி நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. முதலீடுகளை மத்திய அரசு எப்போதும் வரவேற்கிறது. ஆனால், அவற்றை சட்டத்துக்கு உட்பட்டு மேற்கொள்ள வேண்டும் என்ற பொருளில்தான் நான் கூறினேன்’’ என்றார்.


Tags : founder ,Amazon ,India , 7,100 Crore Investment, 5 Years, India, 10 Million Workers, Amazon Founder, Promises
× RELATED பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய...