×

தவான் 96, கோஹ்லி 78, ராகுல் 80 ரன் விளாசல் ஆஸி.க்கு பதிலடி கொடுத்தது இந்தியா

ராஜ்கோட்: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், இந்தியா 36 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று பதிலடி கொடுத்தது. சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் காயம் அடைந்துள்ள ரிஷப் பன்ட்டுக்கு பதிலாக மணிஷ் பாண்டே, ஷர்துல் தாகூருக்கு பதிலாக நவ்தீப் சைனி இடம் பெற்றனர். இந்திய அணி தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 13.2 ஓவரில் 81 ரன் சேர்த்தனர். ரோகித் 42 ரன் எடுத்து (44 பந்து, 6 பவுண்டரி) ஸம்பா சுழலில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து தவானுடன் கேப்டன் கோஹ்லி இணைந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்க்க, இந்திய ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 103 ரன் சேர்த்து அசத்தியது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவான் 96 ரன் (90 பந்து, 13 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் ஸ்டார்க் வசம் பிடிபட்டார்.

அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 7 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தார். 4வது விக்கெட்டுக்கு கோஹ்லியுடன் இணைந்த கே.எல்.ராகுல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கோஹ்லி 50 பந்தில் அரை சதத்தை நிறைவு செய்தார். கோஹ்லி - ராகுல் ஜோடி 78 ரன் சேர்த்தது. ஸம்பா வீசிய 44வது ஓவரின் முதல் பந்தை கோஹ்லி சிக்சருக்குத் தூக்க, எல்லைக்கோட்டருகே நின்றிருந்த ஏகார் அதைப் பிடித்தார். ஓடிய வேகத்தில் அவர் பவுண்டரிக்கு வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் பந்தை தூக்கிப் போட, அருகே இருந்த ஸ்டார்க் பிடித்து அவுட்டாக்கியது குறிப்பிடத்தக்கது. மணிஷ் பாண்டே 2 ரன் மட்டுமே எடுத்து வெளியேற, ராகுல் - ஜடேஜா ஜோடி கடைசி கட்டத்தில் அதிரடியாக 58 ரன் சேர்த்தது. ராகுல் 80 ரன் (52 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ரன் அவுட்டானார். இந்தியா 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன் குவித்தது. ஜடேஜா 20 ரன், ஷமி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆஸ்திரேலிய பந்துவீச்சில் ஆடம் ஸம்பா 3, ரிச்சர்ட்சன் 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 341 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. வார்னர், கேப்டன் பிஞ்ச் இருவரும் துரத்தலை தொடங்கினர். வார்னர் 15 ரன் எடுத்து மணிஷ் பாண்டேவின் அற்புதமான கேட்ச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். பிஞ்ச் 33 ரன் எடுத்து (48 பந்து, 3 பவுண்டரி) ஜடேஜா சுழலில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். ஸ்மித் - லாபுஷேன் ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 96 ரன் சேர்த்தது. லாபுஷேன் 46 ரன் எடுத்து ஜடேஜா சுழலில் ஷமி வசம் பிடிபட்டார். குல்தீப் யாதவ் வீசிய 38வது ஓவரில் அலெக்ஸ் கேரி 18 ரன், ஸ்டீவன் ஸ்மித் 98 ரன்னில் (102 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

கடைசி 10 ஓவரில் ஆஸி. வெற்றிக்கு 106 ரன் தேவைப்பட்ட நிலையில், ஷமி வீசிய 44வது ஓவரின் முதல் பந்தில் டர்னர் (13 ரன்), 2வது பந்தில் கம்மின்ஸ் (0) பெவிலியன் திரும்பினர். ஏகார் 25 ரன், ஸ்டார்க் 6 ரன் எடுத்து சைனி வேகத்தில் ஆட்டமிழந்தனர். ஸம்பா 6 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, ஆஸி. அணி 49.1 ஓவரில் 304 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரிச்சர்ட்சன் 24 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் ஷமி 3, சைனி, ஜடேஜா, குல்தீப் தலா 2, பூம்ரா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 36 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று மும்பை தோல்விக்கு பதிலடி கொடுத்தது. இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களூருவில் நாளை நடக்கிறது.

Tags : Dhawan 96 ,Kohli 78 ,Rahul 80 India ,Vasal ,India ,Aussie , Aussie, retaliated, India
× RELATED பாலெர்மோ ஓபன் டென்னிஸ் பியோனா சாம்பியன்