×

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் பரோலில் வந்து தப்பிய ‘மிஸ்டர் பாம்’ சிக்கினான்: 50 வழக்குகளில் தொடர்பு உடையவன்

மும்பை: மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் தலைமறைவான தீவிரவாதி ஜலீஸ் அன்சாரி நேற்று  கான்பூரில் கைது செய்யப்பட்டான். ‘மிஸ்டர் பாம்’ என்று பெயர் பெற்ற ஜலீஸ் அன்சாரி (68) ஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்பு, மாலேகாவ் குண்டு வெடிப்பு உள்ளிட்ட சுமார் 50 குண்டு வெடிப்புகளில் சம்பந்தப்பட்டவன். மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆஜ்மீர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான். இவன். மும்பை, அக்ரிபாடாவில் உள்ள மொமிம்புராவை சேர்ந்தவன். தனது குடும்பத்தினரை சந்திப்பதற்காக கடந்தாண்டு டிசம்பர் 28ம் தேதி உச்ச நீதிமன்றம் 21 நாள் பரோல் அளித்ததை அடுத்து சிறையில் இருந்து வெளியே வந்தான். அவன் பரோல் முடிந்ததால்,  நேற்று காலை சிறைக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், அவன் மாயமாகி விட்டதாக அக்ரிபாடா காவல் நிலையத்தில் அவனுடைய குடும்பத்தினர் ஜனவரி 16ம் தேதி புகார் அளித்தனர்.

அன்றைய தினம் அதிகாலையில் மசூதிக்கு தொழுகை நடத்த சென்ற அன்சாரி அதன்பிறகு வீடு திரும்பவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். பல மணி நேரம் ஆகி வீடு திரும்பாததாலும், அவனது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததாலும் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். மாயமான அன்சாரியை மும்பை குற்றப்பிரிவு போலீசார் மற்றும் மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், அவன் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கான்பூருக்கு விரைந்து சென்ற மகாராஷ்டிரா போலீசார் ஜலீஸ் அன்சாரியை கைது செய்தனர். ஜலீஸ் அன்சாரி இன்று மும்பைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவான் என தெரிகிறது.

Tags : Pam ,Mumbai , Mumbai, serial blast, case, parole escaped
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...