×

சிலை கடத்தல் தொடர்பு வழக்கு பொன்.மாணிக்கவேல் கோரிக்கை நிராகரிப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: சிலை கடத்தல் வழக்கு விவகாரத்தில் தற்போதைய ஏடிஜிபி அபயகுமார் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க வேண்டும் என்ற பொன்.மாணிக்கவேல் தரப்பின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்து உத்தரவிட்டது. சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வந்த ஓய்வு பெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக பணி நீட்டிப்பு செய்ததற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தது. இதையடுத்து மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும் என கடந்த மாதம் 16ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மேற்கண்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்.மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிபதிகள் முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில், “வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய எங்களுக்கு கூடுதல் கால அவகாசம் வேண்டும்’’ என தெரிவித்தார். இதையடுத்து அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனர். இதில் சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக தற்போதைய ஏடிஜிபி அபயகுமார் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தற்போது விசாரிக்கும் வழக்கோடு ஒன்றாக இணைத்து விசாரிக்க வேண்டும் என பொன்.மாணிக்கவேல் தரப்பில் வைக்கப்பட்ட இரண்டாவது கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து உத்தரவிட்டனர்.

Tags : Idol smuggling, prosecution, gold.management, demand, Supreme Court
× RELATED ரயில் பயணிகளுக்கு இருக்கை கிடைப்பது...