×

தேசிய மக்கள் பதிவேடு விவகாரம் தலைமை செயலாளர்களுடன் ஆலோசனை: உள்துறை அமைச்சக கூட்டம் மேற்கு வங்கம் புறக்கணிப்பு

புதுடெல்லி: ‘வீடுகள் கணக்கெடுப்பு, தேசிய மக்கள் தொகை பதிவு (என்பிஆர்) ஆகியவை, மக்கள் நலனுக்காக அரசு கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு உதவியாக இருக்கும்,’ என டெல்லியில் நேற்று நடந்த மாநில தலைமை செயலாளர்கள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது,. குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் வீடுகள் கணக்கெடுப்பு, மக்கள் தொகை பதிவு பணி ஆகியவை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான வழிமுறைகள் பற்றிய ஆலோசனை கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லியில் நேற்று நடத்தியது. இதில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள், கணக்கெடுப்பு துறை இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டை மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீ நித்தியானந்த ராய் தொடங்கி வைத்தார். மத்திய அரசின் பதிவாளர் ஜெனரல் மற்றும் கணக்கெடுப்பு ஆணையர் விவேக் ஜோஷி வரவேற்புரை நிகழ்த்தினார். துவக்க உரை நிகழ்த்திய நித்தியானந்த ராய், 2021ம் ஆண்டு கணக்கெடுப்பு பணியை நடத்துவதின் அவசியத்தை வலியுறுத்தினார். இதில் மாநில அரசுகள் செய்ய வேண்டிய பணிகளையும் விளக்கினார். இதன் மூலம் பெறப்படும் தகவல்கள் நாட்டு மக்களின் நலனுக்காக, அரசு வகுக்கும் கொள்கை திட்டங்களுக்கு உதவியாக இருக்கும் என அவர் கூறினார். இதற்கான அதிகாரப்பூர்வ சின்னத்தையும் அவர் அறிமுகம் செய்தார்.

மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா ஆற்றிய உரையில், இந்த கணக்கெடுப்பின் பிரமாண்ட பணிகள் குறித்தும், இதில் மாநில அரசு அதிகாரிகளின் ஈடுபாடு குறித்தும் விளக்கினார். அதன்பின் உரையாற்றிய விவேக் ஜோஷி, 2021ம் ஆண்டு கணக்கெடுப்பின் யுக்திகள் குறித்து விளக்கம் அளித்தார். கணக்கெடுப்பு பணியாளர்கள் நியமனம், தேசிய மக்கள் தொகை பதிவு, அச்சிடுதல், தகவல்களை சேகரிக்க மொபைல் ஆப்களை பயன்படுத்துதல், மத்திய அரசின் கண்காணிப்பு வெப்சைட் ஆகியவை குறித்து பதிவாளர் ஜெனரல் அலுவலக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்த கூட்டத்தை மேற்கு வங்கம் புறக்கணித்தது.

Tags : National Secretariat ,Home Ministry Meeting West Bengal ,Secretariat , National Public Records, Affairs, Chief Secretary, Consultancy, Home Ministry Meeting, West Bengal, Neglect
× RELATED விதிகளை மீறி பத்திரிகைகளில் பாஜ...