×

காணும் பொங்கல் கொண்டாட்டம் உற்சாகம் மெரினா, கிண்டி, வண்டலூர் பூங்காவில் லட்சக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்

* பொழுதுபோக்கு மையங்கள் களைகட்டின   
* சென்னையில் 10ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரை, கிண்டி, வண்டலூர் பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் கடற்கரை, பூங்காக்கள், சுற்றுலா தலங்கள், பொழுது போக்கு மையங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர். மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா, தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சி ஆகிய இடங்களுக்கு காலை முதலே மக்கள் குடும்பம் குடும்பமாக குவிய தொடங்கினர். காணும் பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்கு அதிகளவில் வந்ததால், எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கூடுதல் ஆணையர்கள் தினகரன் (வடக்கு), பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு) மற்றும் அருண் (போக்குவரத்து) ஆகியோரது அறிவுரையின் பேரில், காவல் இணை ஆணையர்கள் நேரடி மேற்பார்வையில், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் 5 ஆயிரம் போலீசார், இதர பொழுது போக்கு இடங்களில் 5 ஆயிரம் போலீசார் என மொத்தம் 10 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகே காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள சர்வீஸ் சாலை நுழைவாயில்களில் 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன. மணற்பரப்பில் 13 தற்காலிக உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 பேர் கொண்ட காவல் குழுவினர் பணியமர்த்தப்பட்டு, அவர்களுக்கு வாக்கி டாக்கி, மெகா போன், பைனாகுலர் ஆகியவை வழங்கப்பட்டன. வாட்ஸ்அப் குழு அமைக்கப்பட்டு பைனாகுலர் மூலம் போலீசார் கண்காணித்து மெகா போன் மூலம் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும், நேற்று கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், ஆயுதப்படை, குதிரைப்படையுடன் கூடுலாக 16 குதிரைகள் மற்றும் மணற்பரப்பில் செல்லக்கூடிய 7 வண்டிகள் மூலம் கடற்கரை மணற்பரப்பில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமலும், சிறிய அளவிலான நான்கு சக்கர வாகனங்களில் போலீசார் ஒலிபெருக்கியில் பாதுகாப்பு குறித்த அறிவுரைகள் மற்றும் ஆலோசனை வழங்கினர்.

இதேபோன்று, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் ஒரு தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மீட்புப் பணி மற்றும் மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினர் அடங்கிய ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு வீரர்கள் கொண்ட தீயணைப்பு வாகனம், அப்பகுதியை சேர்ந்த நீச்சல் தெரிந்த 10 பேர் மற்றும் மோட்டார் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டது. 4 தற்காலிக உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, போலீசார் பைனாகுலர் மூலம் கண்காணித்ததுடன், ஒலிபெருக்கி மூலம் அறிவுரைகள் வழங்கினர். குதிரைப்படை மற்றும் ரோந்து வாகனங்களில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்காக சென்னை காவல் மூலம் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரையிலுள்ள 11 காவல் உதவி மையங்கள் மற்றும் எலியட்ஸ் கடற்கரை தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறையில் வழங்கப்பட்டன. கடற்கரைக்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களிடம் அடையாள அட்டையில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்பட்டது.

இதேபோன்று பொதுமக்கள் அதிகம் கூடும் மற்ற இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள் மற்றும் இதர இடங்களிலும் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளிலும் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் உற்சாகமாக காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.
மாநகரில் பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்டும் பணி நடப்பதாலும், ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் பயணித்ததாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆங்காங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் சரிசெய்தனர். குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில், பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.கடற்கரைக்கு வந்த பலர், அங்குள்ள மணற்பரப்பில் இருந்த ராட்டினங்களில் விளையாடுவது, சிற்றுண்டி கடைகளில் சாப்பிடுவது என பொழுதை மகிழ்ச்சியுடன் கழித்தனர். குடும்பமாக வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் சாப்பாடு கொண்டு வந்து வட்டமாக அமர்ந்து உணவு பரிமாறி சாப்பிட்டனர்.

இதேபோல் பெசன்ட்நகர், திருவான்மியூர் கடற்கரைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் கடற்கரை மணற்பரப்பில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் கிண்டி சிறுவர் பூங்காவுக்கு காலை முதல் ஏராளமானோர் கார், பைக்குகளில் கூட்டம் கூட்டமாக வந்தனர். அங்கு பிளாஸ்டிக் தடையை அரசு அமல்படுத்தி இருப்பதால், அதை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களிடத்தில் வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். பூங்காவில் ஏராளமான ஊஞ்சல், சறுக்கல்கள் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் இடம்பெற்றுள்ளது.இதில் குழந்தைகள் ஏறி உற்சாகமாக விளையாடினார்கள். மேலும் கூண்டுகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த வன விலங்குகள், பறவைகளை கண்டு ரசித்தனர். பிறகு அங்குள்ள மரங்களின் நிழலில் அமர்ந்து, உணவுகளை உண்டு மகிழ்ந்தனர். வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சென்னை மட்டுமல்லாது திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர் வந்திருந்தனர்.

முன்னதாக மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை வனத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். இதேபோல் செம்மொழி பூங்கா, கிண்டி காந்தி மண்டபம், காமராஜர் நினைவு மண்டபம் மற்றும் மாநகராட்சி பூங்காக்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. திரையரங்குகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் மாமல்லபுரம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். கடற்கரை, சுற்றுலாத்தலங்களை போலவே கோயில்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்காவிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களுக்கு குடும்பத்துடன் சென்ற மக்கள், சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களின் வசதிக்காக மாநகர் போக்குவரத்துக்கழகம் சார்பில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் சேர்த்து, கூடுதலாக சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் ஏராளமானோர் பயணித்ததால் பஸ், ரயில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. சென்னையைப் போல் கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, மதுரை, தஞ்சை, கன்னியாகுமரி போன்ற ஊர்களிலும் மக்கள், அங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு சென்று காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர். குற்றாலம், ஒக்கேனக்கல் போன்ற நீர்வீழ்ச்சிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. காவிரி உள்ளிட்ட பல்வேறு ஆறுகளிலும், அணைகளுக்கும் சென்று பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.

Tags : Hundreds ,Kindi ,civilians ,park ,marina ,Vandalur Park ,Vandalur , Pongal, Enthusiasm, Marina, Kindi, Vandalur Park, Millions of Public
× RELATED தென்சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர்...