×

இன்டர்வியூ நடத்தி வரும் தமிழக மேலிட பொறுப்பாளர் எங்கு நடத்துகிறார் என தெரியாமல் மூத்த நிர்வாகிகள் அதிருப்தி: மகிளா காங்கிரஸ் தலைவி பதவியை பிடிக்க போட்டா போட்டி

சென்னை: தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி பதவியை பிடிக்க பலர் போட்டி போட்டு வருகின்றனர். இன்டர்வியூ எங்கு நடக்கிறது என்பது கட்சியினருக்கு முறைப்படி தெரிவிக்காததால் போட்டியில் உள்ளவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக தற்போது ஜான்சி ராணி பதவி வகித்து வருகிறார். அவரது பதவி காலம் முடிவடைவதால், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க டெல்லி தலைமை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஒரு ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மகிளா காங்கிரசுக்கு கிடைக்கும் ஒதுக்கீடு அடிப்படையில் சீட் பெறுவது எளிதான ஒன்று என்பதால் பலர் தலைவர் பதவியை பிடிக்க களத்தில் குதித்துள்ளனர். இதனால் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தேசிய மகிளா காங்கிரஸ் செயலாளராக பதவி வகித்து வரும் ஹசீனா சையத், சுமதி அன்பரசு, வக்கீல் சுதா, மைதிலி தேவி, மானசா என இந்த வரிசையில் 25க்கும் மேற்பட்டோர் இடம் பிடித்துள்ளனர்.

அவர்கள் வாய்ப்பு கேட்டு டெல்லி தலைமையை அணுகி வருவதால், யாரை தலைவராக நியமிக்கலாம் என்று கட்சி தலைமையே திணறி வருகிறது. இதனால் வாய்ப்பு கேட்கும் நிர்வாகிகளிடம் முறையாக இன்டர்வியூ நடத்தி, அதில் ஒருவரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வேகமாக செயல்படும் ஒருவரை நியமித்தால் தான், வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள முடியும் என்று கட்சி மேலிடம் கருதுகிறது. விஜயதரணி எம்எல்ஏ, இந்த பதவியில் இருந்த போது மகிளா காங்கிரஸ் வேகமாக செயல்பட்டது. ஆனால் அவர் மாற்றப்பட்டதை தொடர்ந்து அதன் விறு விறுப்பு குறைந்துவிட்டதாக கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது. எனவே அதே வேகத்தை மீண்டும் மகிளா காங்கிரசார் மத்தியில் கொண்டு வர வேகமாக செயல்படும் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, தமிழக மேலிட பொறுப்பாளர் சவுமியா ரெட்டி, வாய்ப்பு கேட்கும் மகிளா காங்கிரசாரிடம் தனியாக இன்டர்வியூ நடத்த கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் முகாமிட்டார். அவர் இன்டர்வியூ நடத்தும் தகவலை மகிளா காங்கிரசில் உள்ள ஒரு தரப்பு வெளியில் சொல்லாமல் மறைத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி அவரது கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து முக்கிய நிர்வாகிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பலர் தனியார் ஓட்டலில் நடந்த இன்டர்வியூவில் கலந்து கொண்டுள்ளனர்.

அவர்களிடம் கட்சிப் பணிகள், குடும்ப பின்னணி, சமூக சேவைகள் உள்ளிட்டவைகள் குறித்து விலாவாரியாக கேள்வி எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இன்டர்வியூ தொடர்பாக முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு, சத்தியமூர்த்திபவனில் நடத்தியிருக்கலாம் என்று மகிளா காங்கிரசார் பலர் ஆதங்கத்தில் உள்ளனர். எது எப்படியோ, விரைவில் அறிவிக்கப்பட உள்ள மகிளா காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தமிழகத்தில் கடும் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், தமிழக மகிளா காங்கிரசில், தலைவர் பதவியை பிடிக்க தற்போது தலைவராக இருக்கும் ஜான்சி ராணி மேலிடத்தை அணுகி வருகிறார்.

Tags : interviewer ,executives ,Mahila Congress ,whereabouts ,interview ,contest , Interview, overseer of seniority, senior executives, dissident, President of Mahila Congress, post, competition
× RELATED சின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேர்...