×

வெளிநாடுகளில் இருந்து கடத்தல் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்; 9 பேரிடம் தீவிர விசாரணை

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வெளி நாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து நேற்று காலை வரை தீவிர சோதனை நடத்தினர். இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த சமீது பாதுஷா (37), வியாசோ அராபத் (20), அசுருதீன் (34), யூசுப் மவுலானா (42) ஆகிய 4 பேர் ஒரு குழுவாக இலங்கைக்கு போய் விட்டு திரும்பி வந்தனர்.

அவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்த போது அவர்களது உள்ளாடைக்குள் 945 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.38 லட்சம். இதையடுத்து இலங்கையில் இருந்து சென்னை வந்த மற்றொரு விமானத்தில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது இலங்கையை சேர்ந்த மரியா சாந்தி (33), பாத்திமா கணேஷ் (51), நிரஜ் நெல்சன் (37), சென்னையை சேர்ந்த கலந்தர் நிபா (21) ஆகிய 4 பேர் சுற்றுலா பயணியாக இலங்கைக்கு போய் விட்டு திரும்பி வந்தனர்.

இவர்களை சோதனையிட்டதில் இவர்களது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 941 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 38.5 லட்சம். அதே போல் தாய்லாந்தில் இருந்து இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த அஞ்சனா (21) என்பவர் சுற்றுலா பயணியாக தாய்லாந்து போய் விட்டு  வந்தார். இவரது கைப்பையில் மறைத்து வைத்திருந்த 554 கிராம் தங்க செயின், தங்க கட்டிகளை கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.23.2 லட்சம். சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் ரூ. 1 கோடி மதிப்புடைய 2.5 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. 9 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.   
இதே போல் சென்னையில் இருந்து தாய்லாந்து செல்லும் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் இருந்து புறப்பட தயாரானது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த ராமநாதன் (27) என்பவர் சுற்றுலா பயணியாக தாய்லாந்து செல்ல வந்தார். அவரது உடைமைகளை சோதனையிட்டனர். எதுவும் இல்லை. அவரது உடலை தடவிப் பார்த்து சோதித்த போது அவரது உள்ளாடைக்குள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்,  யூரோ கரன்சிகள் மறைத்து வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.11 லட்சம்.  


Tags : persons ,overseas , Abducted, smuggled, Rs 1 crore in gold, confiscated
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது