×

காரியாபட்டியில் சார்பதிவாளர்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு பத்திரப்பதிவில் ஆவணங்களை மாற்றி பல கோடி ரூபாய் மோசடி

விருதுநகர்: காரியாபட்டியில் போலி ஆவணங்களை பயன்படுத்தி நடந்த பல கோடி மோசடிக்கு, துணையாக இருந்த சார்பதிவாளர்கள், துணை வட்டாட்சியர், செயல் அலுவலர்கள் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம், தேனூரைச் சேர்ந்தவர் அகமது தாஜூதீன். இவர் குடும்பத்துடன் மலேசியாவில் வசித்து வருகிறார். இவரது தந்தை முகமது யூசுப்புக்கு சொந்தமான நிலங்கள், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் உள்ளது. 1988ல் தந்தை இறந்த பின், அகமது தாஜூதீனுக்கு 90 சென்ட் நிலம் பங்காக கிடைத்தது. இதில் 26 கடைகள், ஒரு ஓட்டல், ஒரு டீக்கடை மற்றும் காலியிடத்தில் 18 ஷெட்டுகள் போட்டு வாடகை விட்டிருந்தார். மன்சூர் என்பவர் கடைகளை பராமரித்து, வாடகையை வசூலித்து வந்தார். அவரது மறைவிற்கு பிறகு மதுரையைச் சேர்ந்த மைதீன் வாடகையை வசூலித்து வந்தார்.

இந்நிலையில், அகமது தாஜூதீன் குடும்பத்தினர் மொத்த இடங்களையும், ரூ.5 கோடிக்கு விலை பேசி, குராயூரைச் சேர்ந்த வீரபத்திரனுக்கு கடந்த 2019, ஜன. 21ல் விற்பனை செய்துள்ளனர். பத்திரப்பதிவின்போது ரூ.1 லட்சத்தை மட்டும் கொடுத்து விட்டு, மீதத்தொகையை, பத்திரப்பதிவு ஆவணங்கள் வந்தவுடன் தருவதாக கூறியுள்ளனர். ஆனால், டிடியை தரவில்லை. மேலும், பல தவணைகளில் ரூ.1 கோடியே 10 லட்சத்து 70 ஆயிரம் மட்டும் கொடுத்துள்ளனர். மீதி தவணைக்கு 13 செக்குகளை கொடுத்துள்ளனர்.

பத்திரப்பதிவின்போது டிடியை கொடுக்காமல் கிரையப்பத்திர நகலை மட்டும் வீரபத்திரன் கொடுத்துள்ளார். அந்த நகலில் பதிவின்போது ரூ.1 கோடியே 60 லட்சத்து 10 ஆயிரம் டிடியாக பெற்றுக் கொண்டதாக, ஆவணத்தின் 4வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்திர ஆவணங்களில் 1 மற்றும் 4வது பக்க ஆவணங்களில் அகமது தாஜூதீன் கையெழுத்துகள் போலியாக போடப்பட்டு பத்திரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. போலியான பத்திரப்பதிவை தொடர்ந்து பட்டா மாறுதல், சொத்து வரி ஆகியவை செலுத்தப்பட்டுள்ளது. தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த அகமது தாஜூதீன் தரப்பினர், போலி ஆவணங்கள் மற்றும் செக் மோசடி தொடர்பாக, விருதுநகர் எஸ்பிக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

இதைத்தொடர்ந்து அகமது தாஜூதீன் மனைவி மெஹர்பான் பீவி, விருதுநகர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து மோசடிக்கு உடந்தையாக இருந்த காரியாபட்டி சார்பதிவாளர்கள் வீரமோகன், முருகன், துணை வட்டாட்சியர் தனக்குமார், செயல் அலுவலர் மோகன் கென்னடி, ஆவண எழுத்தர் நரேந்திரன், முத்திரை விற்பனையாளர் சீதாலட்சுமி மற்றும் வீரபத்திரன் ஆகிய 7 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : persons ,dependents ,Kariyapatti ,Seven Persons , Kariyapatti, Dependents, 7 persons, Case, multi crores, fraud
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது