×

காணும் பொங்கல் விழா களைகட்டியது: முக்கொம்பு, பூம்புகாரில் உற்சாக கொண்டாட்டம்

திருச்சி: தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சி முக்கொம்பு, கல்லணை, பூம்புகார், தஞ்சை பூங்காவில் மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து குவிந்தனர். சென்னை மெரினா கடற்கரையிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தை முதல் நாள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. 2ம் நாள் மாட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 3ம் நாளான இன்று தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
காணும் பொங்கல் தினத்தில் மக்கள் தங்கள் சொந்தபந்தம், குழந்தை குட்டிகளுடன் சுற்றுலா தலங்களுக்கும், கோயில்களுக்கும் சென்று வருவார்கள். தை 1, 2ம் தேதிகளில் அசைவ உணவை தவிர்த்த மக்கள் இன்று அசைவ விருந்து சாப்பிட்டு சுற்றுலா தலங்களுக்கு காலையிலேயே புறப்பட்டனர்.

திருச்சியில் இன்று காலையிலேயே மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோயில், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக காணப்பட்டது. இதுபோல திருச்சி அடுத்த முக்கொம்பு பூங்காவுக்கு மக்கள் குடும்பம் குடும்பமாக வரத்தொடங்கினர். அங்குள்ள ராட்டினங்களில் சுற்றுவதற்கு மக்கள் நீண்ட கியூவில் நின்றனர். முக்கொம்பு தடுப்பணை உடைந்து விட்டதால் இந்த ஆண்டு திருச்சி- நாமக்கல் சாலையில் இருந்து மக்கள் வர முடியவில்லை. அனைவரும் குளித்தலை-மெயின்கார்டு சாலைவழியாகவே பூங்காவுக்கு வந்தனர்.

காவிரியில் தண்ணீர் பெருகி ஓடும் அழகை கண்டு ரசித்த குழந்தைகள் காவிரில் குதித்துநீந்தி மகிழ்ந்தனர். ஆழமான பகுதிக்கும், சுழல் உள்ள பகுதிக்கும் சிறுவர்கள் செல்வதை தடுக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பூங்காவில் வழக்கத்தை விட இன்று காதல் ஜோடிகளின் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது.ஆங்காங்கே உள்ள சிலைகள் முன்பு நின்றும், ஊஞ்சல்களில் ஏறியும் காதல் ஜோடிகள் செல்பி எடுத்துக்கொண்டனர். கொல்லிமலை அடிவாரமான புளியஞ்சோலையிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இங்கு அதிக அளவில்இளைஞர்கள் வந்து குவிந்தனர். புளியஞ்சோலை ஆற்றில் தண்ணீர் குறைவாக வந்தபோதிலும் இளைஞர்கள் அதில் குளித்து கும்மாளமிட்டனர்.

நாகை மாவட்டம் பூம்புகாரில் காவிரி வங்க கடலில் கலக்கிறது. இதன் அருகில் பூம்புகார் கலைக்கூடம் கட்டப்பட்டு சுற்றுலா தலமாக உருவாக்கப்பட்டுள்ளது. இங்கும் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. தற்காலிக கடைகளும்அமைக்கப்பட்டிருந்தது. மக்கள் கடலில் இறங்கி நீராடினர். பின்னர் கலைக்கூடம் சென்று சுற்றிபார்த்தனர். நாகை புதிய கடற்கரையிலும் இன்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்களை ஈர்க்கும் வகையில் நாகூர் தேசிய மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மணலில் டைனோசர், ஆமை, போன்ற மணல் சிற்பங்களை அமைத்தனர். இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல், மணமேல்குடி அருகே கோடியக்கரை, கடற்கரை பகுதிகளில் மக்கள் குவிந்தனர். இதையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல் தஞ்சை பெரியகோயில், சிவகங்கை பூங்கா உள்ளிட்ட முக்கிய இடங்களில் மக்கள் குவிந்தனர்.இதுபோல தமிழகம் முழுவதும் அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

Tags : Pongal Festival , Pongal
× RELATED பக்தர்களின் ‘ஆகோ அய்யாகோ’ கோஷம்...