×

ரேஷன் கடையில் வழங்கும் பொங்கல் பரிசு திருச்சி, சென்னையில் 2% பேர் வாங்கவில்லை

சென்னை: தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை 98 சதவீதம் பேர் வாங்கியுள்ளனர். திருச்சி சென்னையில் 2 சதவீதம் பேர் இந்த பொங்கல் பரிசை வாங்கவில்லை. பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, 2 அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்க பணம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கடந்த 9ம் தேதியில் இருந்து 13ம் தேதி வரை பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த 5 நாட்களாக பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கி வந்தனர்.அரசு அறிவித்தபடி, 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில் 2 கோடியே ஒரு லட்சம் அட்டைதாரர்கள் அந்த 5 நாட்களில் மட்டும் பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 வாங்கி சென்றனர்.இந்நிலையில் தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள், அனைத்து மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு கடந்த 13ம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதில், “பொங்கல் பண்டிகைக்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் கடந்த 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை விநியோகம் செய்யப்படவேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களும் பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு வருகிற 21ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.

விடுபட்ட அட்டைதாரர்கள் ரேஷன்கடை வேலை நாட்களில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணத்தை பெற்றுக் கொள்ளலாம்” என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்தபோது, தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணத்தை ஏழை, பணக்காரர்கள் என வித்தியாசம் இல்லாமல் பெற்றுச் சென்றனர். தமிழகத்தில் மொத்தமே 2.10 கோடி ரேஷன் கார்டுகள்தான் இருந்தது. இதில் 2.05 கோடி பேர் அரிசி பெறும் அட்டைதாரர்களாக உள்ளனர். இதுவரை 98 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 100 சதவீதம் பேரும், சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மட்டும்தான் 2 சதவீதம் பேர் அதாவது சுமார் 4 லட்சம் பேர் வாங்கவில்லை. இவர்கள் பெரும்பாலும், அரசு இலவசமாக வழங்கும் திட்டத்தை பெறக்கூடாது என்று வைராக்கியத்துடன் இருப்பவர்களாக இருக்கலாம். அல்லது வெளியூர் சென்றிருக்கலாம். மற்றபடி, அரசு வழங்கிய ரூ.1000 பணத்தை காரில் வந்துகூட பலர் வாங்கி சென்றனர். கடந்த மூன்று நாட்களாக ரேஷன் கடை விடுமுறை என்பதால், பொங்கல் பரிசு வாங்காதவர்கள் இன்று, நாளை (சனி) வாங்கிக் கொள்ளலாம். பொங்கல் பரிசு திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.2,363 கோடி நிதியும் ஒதுக்கி இருந்தது. இதில் ரூ.2,360 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

ரகசிய விசாரணை நடத்த துறை செயலருக்கு கோரிக்கை

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு வழங்கிய முந்திரி, ஏலக்காய், திராட்சை, கரும்பு, ரூ.1000 ரொக்கப்பணம் ரேஷன் கடைகளில் 98 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 100 சதவீதம் வழங்கியது போன்று கணக்கு காட்டப்பட்டு, மீதமுள்ள பணம், பொருட்களை அந்தந்த மண்டல உயர் அதிகாரிகளே எடுத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக ரேஷன் கடை ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். முக்கியமாக ரேஷன் கடைகளில் முதல் ஒன்று, இரண்டு நாட்கள் மட்டுமே கரும்பு வழங்கப்பட்டது. மற்ற நாட்கள் கரும்பு வழங்கப்படவில்லை. அதற்கான பணமும் சுவாகா செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, காஞ்சிபுரம் உயர் அதிகாரி மீது ஒவ்வொரு ஆண்டும் இதே குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இவர், ஓய்வுபெற்ற முன்னாள் கூட்டுறவு சார் பதிவாளர் ஒருவரை வைத்துக் கொண்டு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், பிரதம கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்களிடம் ரேஷன் கடை எண்ணிக்கைக்கு ஏற்ப மாதம் மாதம் லட்சக்கணக்கில் பணம் அடிப்பதாகவும் புகார் எழுந்தது. இவர் கூட்டுறவு துறை அமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவர். அதனால், இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்கியதில் அனைத்து மண்டல இணை பதிவாளர்கள் நேர்மையாக செயல்பட்டனரா என்பது குறித்து துறையின் செயலாளர் ரகசிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Trichy ,Chennai , Pongal gift
× RELATED திருச்சியில் போலி மது பாட்டில்கள் பறிமுதல்..!!