×

கஜா புயலின்போது அடியோடு சாய்ந்த ஆலமரத்தை நிமிர்த்தி நடப்படுமா? : இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டையில் கஜா புயல் சாய்த்த நிலையிலும் கிளை பரப்பி வளரத்துடிக்கும் தேசிய மரத்தை  (ஆலமரம்) நிமிர்த்தி நட அரசு அதிகாரிகள் முன்வர வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இந்தியாவின் தேசிய மரமான  ஆலமரம் மிக பிரமாண்டமாக வளர்வதோடு பல நூறு ஆண்டுகள் வரையிலும் வேர்பரவி விழுது பரப்பி வாழக்கூடியதாகும், இந்தியாவின் அனைத்துப்  பகுதிகளிலும் இயற்கையாக வளரும் இம்மரம் இமயமலை சரிவுகளில் காட்டு மரம் போல வளர்கிறது.கோயில்களில் தல விருட்சமாகவும்,  ஊர்மத்தியில் நிழலுக்காகவும் வளர்க்கப்பட்டு வந்த இம்மரம் கிராம மக்கள் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கமாக விளங்கி வருகிறது, அத்திக்  குடும்பத்தைச் சேர்ந்த இம்மரம் சுமார் 40 மீட்டர் உயரம்வரை வளரக் கூடியது. பருத்த அடிமரத்தைக் கொண்டிருக்கும் ஆலமரம் சுமார் 15 மீட்டருக்கு  மேல் சுற்றளவு கொண்டிருக்கும் ,

ஆலமரத்திலிருந்து கிடைக்கும் ஒட்டும் தன்மையுடைய பால் ரப்பராகவும் பயன்படுகிறது.இந்தப்பால் மூட்டு வலிக்கு பயன்படுத்தப்படுகிறது, இதன்  பட்டை நீரிழிவு நோயைத் தீர்க்கும். ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி் என்பதற்கேற்ப ஆலம் விழுதுகள் ஈறு நோய்க்கு அருமருந்தாகும். ஆலமரத்தின்  கட்டைகளை காகித தயாரிப்புக்கு பயன்படுகிறது, ஆலமரத்தின் இலை, கனி, பட்டை, பால் என அனைத்துமே மருத்துவ பயன்பாட்டில் உள்ளது,
இந்நிலையில் கடந்தாண்டில் வீசிய கஜா புயலால் லட்சக்கணக்கான உயிர் மரங்கள் முறிந்தது. இதில் பெரும்பாலான பகுதிகளில் நூறாண்டுகளை  கடந்தும் நிழல் பரப்பிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான ஆலமரங்கள் அடியோடு பெயர்ந்து சாய்ந்தன.

இதையடுத்து அரிய மரங்களை அகற்றாமல் நிமிர்த்தி நவீன முறையில் நட்டு வளர்க்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். ஆனாலும் விழுந்த  மரங்களோடு உயிர் மரங்களையும் உடன் சேர்த்து வெட்டி அகற்ற அரசு இயந்திரம் முன் வந்ததே தவிர அரிதான மரங்களை நிமிர்த்தி நட எந்தவித  ஏற்பாடுகளையும் செய்யவில்லை.இதனால் லட்சக்கணக்கான மரங்கள் செங்கல் சூளை பயன்பாட்டுக்காகவும், அனல் மின் நிலையத்திற்கும்  ஏற்றிவிடப்பட்டன. இவற்றில் தப்பிப்பிழைத்த மரங்கள் பல கஜாவின் நினைவுச்சின்னங்களாக ஆங்காங்கே உயிர்தப்பி நிற்கின்றன. இந்நிலையில்  முத்துப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் இருந்த நூறு ஆண்டை கடந்த ஆலமரமும் கஜாவில் சரிந்து விழுந்த நிலையில் உயிர் பிழைத்து  கிடக்கிறது.

மரத்தின் பெருங்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டு விட்ட நிலையிலும் மற்ற பகுதி கிளைகள் தளிர்விட்டு பசுமை கண்டுள்ளது. கஜா சுவடுகள் கரைந்து  ஓராண்டைக்கடந்தும் உயிர் பிழைத்து கிடக்கும் ஆலமரத்தை நிமிர்த்தி நட வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.தமிழகத்தில் கோயம்புத்தூர், பொள்ளாச்சி, தேனி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே மரங்களை சாலை விரிவாக்கம் மற்றும் நகர்புற  மேம்பாட்டிற்காக அகற்ற வேண்டியங் நிலை ஏற்பட்டபோது அவற்றை உயிருடன் பெயர்த்து அதிகாரிகளால் வேறிடத்தில் நட்டுள்ளனர். இதற்கென  நவீன மிஷின்களும் கண்டிபிடிக்கப்பட்டு தற்போது பயனில் உள்ளது,

அதேபோல முத்துப்பேட்டையில் சரிந்து கிடக்கும் பழமையான ஆலமரத்தை அருகேயே அகலமான பள்ளம் வெட்டி நட்டு நிரந்தரமாக வளரச்செய்ய  முடியும். இதுகுறித்து மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் தெரிவித்து மரத்தை பெயர்த்து நடவலியுறுத்தப்பட்டுள்ளது. பொன்லைன்  துணையுடன் ஒருசில மணி நேரங்களில் ஆலமரத்தை நட்டுவிட முடியுமென்றாலும் அதற்கான நடவடிக்கைக்கு இயற்கை ஆர்வலர்கள் ஆர்வமின்றி  உள்ளதால் மரம் படுத்த படுக்கையில் உள்ளது.

Tags : storm ,Khaja ,naturalists , Nature enthusiasts, emphasis, Muthupettai, banyan tree, kaja storm
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...