×

திருவள்ளுவர் தினத்தையொட்டி தியாகராஜ சுவாமி கோயில் மாடுகளுக்கு சிறப்பு பூஜை

திருவாரூர்: திருவள்ளுவர் தினத்தையொட்டி திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலிலிருந்து வரும் பசு மடம் உட்பட பல்வேறு இடங்களில்  மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகையானது தமிழர் திருநாளாக நாடு  முழுவதும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த பொங்கல் பண்டிகைக்கு பின்னர் தாங்கள் வளர்த்து வரும்  கால்நடைகளுக்காக மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மற்ற பண்டிகைகளை விட இந்த பண்டிகையானது தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கொண்டாடப்பட்டு வருவதால் வெளியூர்களில்  இருந்து வரும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி தாய், தந்தை மற்றும் உறவினருடன் ஒன்றாக பொங்கலிட்டு வழிபடுவது  வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் பொதுமக்கள் தங்களிடம் எவ்வளவு வசதி வாய்ப்புகள் பெருகினாலும் பெரும்பாலானவர்கள் தற்போது  வரையில் இந்த பொங்கல் பண்டிகையை மண்பானையும், மண் அடுப்பையும் கொண்டு பழமை மாறாமல் கொண்டாடும் நிலையும் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த பண்டிகையினை ஏற்ற இறக்கம் இல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து சமத்துவ பொங்கலாகவும் கொண்டாடி வருகின்றனர்.  அதன்படி இந்த பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று திருவள்ளுவர் தினமாக மாட்டுப் பொங்கல்  கொண்டாடப்பட்டது. இதனையொட்டி உழவர்கள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு பொங்கலிட்டு படைக்கும் இந்த  நாளையொட்டி நேற்று கால்நடைகளுக்கு தேவையான நெட்டி மாலைகள் மற்றும் பூ மாலைகள் அமோகமாக விற்பனையான நிலையில் தங்களது  மாடுகளின் கொம்புகளில் வர்ணம் தீட்டும் பணிக்காகவும், அதற்கான வர்ணங்களை வாங்கும் பணியிலும் உழவர்கள் மற்றும் பொது மக்கள்  ஈடுப்பட்டனர்.

மேலும் தாங்கள் வளர்த்து வரும் மாடுகள், ஆடுகள் மற்றும் காளைகளை நேற்று காலையிலேயே குளிப்பாட்டி சந்தனம் மற்றும் மஞ்சள் பொட்டு  வைத்ததுடன் அதன் கழுத்திற்கு புதிய கயறு, மாலைகள் மற்றும் மணிகளை கட்டி அழகு பார்த்தனர். மேலும் கால்நடைகளுக்கென தனியாக  பொங்கலிட்டு அதனை சூரியபகவானுக்கு படைத்து பின்னர் மாடுகளுக்கும் வழங்கினர். பின்னர் தங்களது கால்நடைகளை மேலதாளத்துடன்  ஊர்வலமாக அழைத்துச் சென்று மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்தனர். மேலும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் மற்றும் வாசன் நகரில்  இருந்து வரும் சாய்பாபா கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் இருந்து வரும் பசுமடங்கள் மற்றும் தனியார்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வரும்  பசு மடங்களில் நேற்று மாட்டுப்பொங்கலானது வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொருக்கை அரசு கால்நடை பண்ணையில் 500க்கும் மேற்பட்ட உலக பிரசித்தி பெற்ற  உம்பளச்சேரி இன மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு  மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு பண்ணையில் உள்ள மாடுகளை குளிப்பாட்டி  மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து பொங்கல் வைக்கப்பட்டு கால்நடைகளுக்கு  உணவுகள் வைத்து  படைத்து மரியாதை செலுத்தும் விதமாக தாரை தம்பட்டம் முழங்க மாட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் கால்நடை மருத்துவர்  நெப்போலியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜானகிராமன், தமிழ்மணி, மற்றும் விவசாயிகள் மற்றும் கால்நடை பண்ணை ஊழியர்கள் பங்கேற்று  மரியாதை செலுத்தினர்.   


Tags : pooja ,Thiyagaraja Swamy ,Thiruvalluvar , Thiruvalluvar, Day, Thiyagarajaswamy, Thiruvarur, Puja, Cows, Livestock
× RELATED வேதாள முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்