×

கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் கொண்டாட்டம்

கோபி: கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு அரசு விடுமுறை  மற்றும் பண்டிகை காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அருவி போல் கொட்டும் அணை நீரில் பெண்கள் மற்றும்  குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதால், விடுமுறை நாட்களில் ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு  மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவது வழக்கம்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாள் தொடர் விடுமுறை காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அணைக்கு  வந்தனர். இதனால் கொடிவேரி பிரிவில் இருந்து அணை வரை உள்ள 2 கி.மீ. தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  ஏற்கனவே  கொடிவேரி- பெருந்துறை கூட்டு குடிநீர் திட்ட பணிக்கு குழாய் பதிக்கும் வேலை நடந்து வருவதால், பல இடங்களில் குழி பறித்து போடப்பட்டுள்ளது.  இதனாலும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அணை வரை செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா  பயணிகள் தங்கள் வாகனங்களை அணை பிரிவிலேயே நிறுத்தி விட்டு குழந்தைகள் மற்றும் வயதான முதியவர்களுடன் 2 கி.மீ. தூரம் நடந்தே  அணைக்கு சென்றனர்.

இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது: பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வரும் காலங்களில்  மட்டுமாவது பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், அணை பிரிவில் இருந்து அணை வரை வாகன ஏற்பாடு செய்ய வேண்டும்.அதே  போன்று இது போன்ற காலங்களில் பாதுகாப்பு பணிக்காக அதிகளவு போலீசாரை நியமிக்க வேண்டும். தற்போது குறைந்த அளவே போலீசார்  நியமிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. அதே போன்று மது அருந்தி அணைக்கு வருபவர்களையும் தடுத்து  நிறுத்த வேண்டும் என்றனர்.பவானிசாகர் அணை:ஈரோடு மாவட்டம் பவானிசாகர்  அணை முன்பு 15 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு  சொந்தமான பூங்கா  அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சிறுவர் சிறுமியர் விளையாடி மகிழ ஊஞ்சல்,  சறுக்கு, கொலம்பஸ், வாட்டர் கேம், ரயில்,  படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு  வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் தொடர் விடுமுறை என்பதால், நேற்று காலை  முதல் பவானிசாகர் அணைப்பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.   ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து  வந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடும்பத்துடன்  பூங்காவில்  விடுமுறையை உற்சாகத்துடன் கழித்தனர். சிறுவர், சிறுமியர் தண்ணீரில்  குளித்து விளையாடியும், ஊஞ்சல், சறுக்கு, படகு உள்ளிட்ட  பல்வேறு விளையாட்டு  சாதனங்களில் விளையாடி மகிழ்ந்தனர்.  பொதுமக்கள் குடும்பத்துடன் புல்வெளி  தரையில் அமர்ந்து உணவு அருந்தியதோடு,  தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து  மகிழ்ந்தனர்.  இன்று காணும் பொங்கல் என்பதால் பார்வையாளர்களின் வருகை  அதிகரிக்கும் என  பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Tourists Celebration ,Kodiveri Dam Kodiveri Dam , Kodiveri, Dam, Tourists, Celebration, Kobe
× RELATED கேரளத்தின் காஷ்மீர்; ஆப்பிள் விளையும்...