×

ஈரோடு மாவட்டத்தில் நாளை ஜல்லிக்கட்டு : கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

ஈரோடு:   பொங்கல் பண்டிகையையொட்டி 18ம் தேதி (நாளை) ஈரோட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் கதிரவன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டில் உடற்கூறு தகுதி சான்று உள்ள காளைகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படும் என கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.பொங்கல் பண்டிகையையொட்டி ஈரோடு பவளத்தாம்பாளையம் ஏஇடி பள்ளி மைதானத்தில் ஜல்லிக்கட்டு 18ம்தேதி (நாளை) நடைபெறவுள்ளது. ஜல்லிக்கட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் இது குறித்து கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளதாவது:-

பொங்கல் பண்டிகையையொட்டி நாளை 18ம்தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டிற்காக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் காவல்துறை அலுவலர்கள் போதுமான ஏற்பாடுகள் செய்யவும், பொதுப்பணித்துறை அலுவலர்கள் பார்வையாளர்கள் மாடம், தகுதி சான்று மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை நிர்ணயித்து தரவும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர் மாடுபிடி வீரர்களின் உடற்கூறு தகுதியை சான்றிதழ் செய்வதோடு போதுமான மருத்துவர்கள், மருந்துகள், ஆம்புலன்ஸ் வசதிகள் போன்றவை ஏற்பாடு செய்திடவும், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்களால் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு உடற்கூறு தகுதி என சான்றளிக்கவும், மத்திய பிராணிகள் நலவாரியத்தால் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படும்.  

அந்த காளைகள் ஊக்குவிப்பு மருந்துகளோ, போதை வஸ்துகளோ உட்கொண்டுள்ளதா? என்பதை பரிசோதித்து பார்க்கவும், காளைகள் போட்டியின்போது காயமுற்றால் அவைகளுக்கு போதுமான சிகிச்சை அளிக்கவும் விளையாட்டு திடல் அருகில் போதுமான மருந்துகளுடன் கால்நடை மருத்துவர்களை கொண்ட மருத்துவ முகாம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காளைகளின் கொம்புகள் கூர்மையாக சீவப்பட்டிருந்தால் மரக்கவசம் அமைத்திருக்க வேண்டும். இல்லையெனில் கால்நடை மருத்துவர் மூலம் கூர்மழுங்க செய்யவும், காளைகள் விளையாட்டில் பங்கேற்கும் முன் ஓய்வாக இருக்க கட்டுத்துறை, தண்ணீர் வசதி செய்திடவும் ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. காளைகளில் மிளகாய்பொடி தடவுதல், சகதி தடவுதல், மூக்குப்பொடி தடவுதல் போன்ற தகாத செயல்களால் அவைகளை வெறியூட்ட செய்யாதிருத்தலை உறுதி செய்திட வேண்டும்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் வாடிவாசலுக்கு வருவதற்கு முன்பு 20 நிமிடத்திற்கு மேல் ஓய்வு எடுக்கவும், காளைகளை கால்நடை பராமரிப்புத்துறையினர் ஆய்வு செய்வதற்கு இடவசதி ஏற்படுத்துவதுடன் மாடுபிடி தளம் 50 சதுரமீட்டர் பரப்பளவில் இடவசதியுடன் 100 மீட்டர் நீளத்திற்கு அமைக்க வேண்டும். பார்வையாளர்கள் அமரும் இடம் வலுவான கட்டைகளை கொண்டு உறுதியாக அமைத்து பொதுப்பணித்துறையினரிடம் அதற்கான சான்றினை பெற்றிருக்க வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் தாவி குதித்து வராத வகையில் குறைந்தபட்சம் 8 அடி உயரம் தடுப்பு கட்டை அமைக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி கடைபிடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின்போது மாவட்ட எஸ்.பி. சக்திகணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் குழந்தைசாமி மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags : Erode district ,team ,Collector Erode district ,Collector , Pongal, Erode, jallikattu Bulls
× RELATED காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க...