×

நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் கருணை மனுவை குடியரசு தலைவருக்கு அனுப்பியது உள்துறை அமைச்சகம்

புதுடெல்லி: நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் கருணை மனுவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012ல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பஸ்சில் இருந்து தூக்கியெறியப்பட்டதில் உயிரிழந்தார். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவன் சிறுவன் என்பதால், 3 ஆண்டு சிறை தண்டனை பெற்று இப்போது வெளியில் உள்ளான். எஞ்சிய முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உறுதி செய்து இவர்களுக்கு வரும் 22ம் தேதி தண்டனையை நிறைவேற்ற வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூக்கு தண்டனை ரத்து செய்ய கோரி, முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவை துணைநிலை கவர்னருக்கு நிராகரித்தார். முகே‌‌ஷ் குமார் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கும் அவர் நேற்று பரிந்துரைத்தார். இதற்கிடையே வருகிற 22-ம் தேதி தண்டனையை நிறைவேற்றுமாறு டெல்லி கோர்ட்டு பிறப்பித்த மரண வாரண்டை எதிர்த்து ஐகோர்ட்டில் முகே‌‌ஷ் குமார் சிங் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ‘நிர்பயா வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு நிகழ்வுகள் நடப்பதால், குற்றவாளிகளை 22-ம் தேதி தூக்கில் போடக்கூடாது’ என முகே‌‌ஷ் குமார் சிங்கின் வக்கீல் வாதிட்டார். இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் கீழ் கோர்ட்டை அணுகுமாறு மனுதாரருக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் தூக்கிலிடப்படும் நடவடிக்கையின் நிலவர அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு திகார் சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில்  தூக்கு தண்டனை ரத்து செய்ய கோரி, முகேஷ் அனுப்பிய கருணை மனுவை குடியரசு தலைவருக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.


Tags : murder ,Mukesh ,Ramnath Govind ,Republican ,Nirbhaya ,Home Ministry , Nirbhaya case, Mukesh, mercy petition, Home Ministry, Republican leader Ramnath Govind
× RELATED அம்பானி இல்ல திருமண விழாவில் திருட முயன்ற திருச்சி கும்பல் கைது