×

சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்

திருவனந்தபுரம்: ஆயிரக்கணக்கான பக்தர்களின் சாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷங்களுக்கு மத்தியில் சபரிமலை பொன்னம்பல மேட்டில் நேற்று முன்தினம் மகர ஜோதி தெரிந்தது. சபரிமலையில் இந்த வருட மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த டிச.30ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. 31ம் தேதி முதல் மகர விளக்கு கால பூஜைகள் தொடங்கின. இந்நிலையில், நேற்று முன்தினம் (15ம் தேதி) மகர விளக்கு பூஜை நடந்தது. அன்று அதிகாலை சுமார் 2.09 மணிக்கு மகர சங்கிரம பூஜை நடந்தது. நேற்று முன்தினம் மாலை பந்தளத்தில் இருந்து திருவாபரணம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. 5.45 மணியளவில் இந்த ஊர்வலம் சரங்குத்தியை அடைந்தது. அங்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வாகிகள் திருவாபரணத்துக்கு வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து, இந்த ஊர்வலம் சன்னிதானத்தை நோக்கி புறப்பட்டது. 6.35 மணியளவில் சன்னிதானத்தை அடைந்த இந்த திருவாபரணங்கள் அடங்கிய பேடகத்தை தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் வாங்கி கோயிலுக்குள் கொண்டு சென்றனர். பின்னர் கோயில் நடை சாத்தப்பட்டது. தொடர்ந்து ஐயப்ப விக்ரகத்தில் திருவாபரணம் அணிவித்து தீபாராதனை நடத்தப்பட்டது. இதேசமயத்தில் 6.51 மணிக்கு பொன்னம்பல மேட்டில் முதல் ஜோதி தெரிந்தது. பின்னர், அடுத்தடுத்து 2 முறை மகர ஜோதி தெரிந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என சரண கோஷம் முழங்கினர்.

மகர ஜோதியை தரிசிப்பதற்காக பாண்டித்தாவளம், மாளிகை புரம், சரங்குத்தி, சபரிபீடம், நீலிமலை, புல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் திரண்டிருந்தனர். தரிசனம் முடிந்த உடன் பக்தர்கள் அனைவரும் தங்களது ஊர்களுக்கு திரும்பினர். அப்போது நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீசார் பல இடங்களில் கயிறு கட்டி பக்தர்களை ஒழுங்குபடுத்தினர். வரும் 20ம் தேதி இரவு வரை கோயில் நடை திறந்திருக்கும். அன்று வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். 19ம் தேதி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். 21ம் தேதி காலை 7 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். அன்று பக்தர்கள் யாரும் தரிசனம் செய்ய அனுமதியில்லை. அன்றுடன் இவ்வருட மகர விளக்கு காலம் நிறைவடையும்.

* இளையராஜா உருக்கம்
கேரள அரசு மற்றும் தேவசம்போர்டு சார்பில் ஆண்டு தோறும் வழங்கப்படும் இசை, நாட்டியம் உள்பட கலைகளுக்கான, ‘ஹரிவராசனம்’ விருது, இந்தாண்டு இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. சபரிமலை சன்னிதானம் கலையரங்கில் நேற்று நடந்த விழாவில், இளையராஜாவுக்கு தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இந்த விருதை வழங்கினார். இதில், இளையராஜா பேசுகையில், ‘‘சபரிமலை போல பக்தியும், தெய்வீகமும் இணைந்த ஒரு புண்ணிய பூமி உலகில் வேறு எங்கும் இல்லை. ஐயப்பன் அழைக்காமல் யாரும் இங்கு வர முடியாது. ஹரிவராசனம் விருதை நீ வாங்க வேண்டும் என்ற ஐயப்பனின் அருள் வாக்கை கேட்டுதான் நான் இங்கு வந்தேன்,’’ என்றார்.

* வருமானம் ரூ.233 கோடி
கடந்த ஜனவரி 14ம் தேதிவரை சபரிமலையில் கிடைத்த மொத்த வருமானம் ரூ.233,41,72,282 கோடி.. இதில் மண்டல காலத்தில் கிடைத்த வருமானம் ரூ.163,67,68,468 ஆகும். மகரவிளக்கு காலத்தில் 14ம் தேதி வரை 69,74,03, 814 கோடியாகும். இதுவரை நாணயங்கள் எண்ணப்படவில்லை இது ரூ.8 கோடிக்கு மேல் இருக்கும் என்று கருதப்படுகிறது. இதையும் சேர்த்தால் மொத்த வருமானம் ரூ.241 கோடியை தாண்டும். இது கடந்த ஆண்டை விட ரூ.65 கோடிக்கு அதிகமாகும்.

Tags : Makar Jyoti Darshan ,Sabarimala ,devotees , Sabarimalai, Makar Jyoti Darshan, thousands of devotees, Parasavam
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு