×

வன்முறை, அடக்குமுறை இல்லாமல் பேச்சு மூலமாக முரண்பாடுகளை தவிர்ப்பதுதான் இந்திய வழிமுறை: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ‘‘வன்முறை, அடக்குமுறை இல்லாமல், பேச்சுவார்த்தை மூலம் முரண்பாடுகளை தவிரப்பதுதான் இந்தியாவின் வழிமுறை,’’ என பிரதமர் மோடி கூறியுள்ளார். ‘உலகளாவிய இந்திய சிந்தனை’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம், கேரள மாநிலம் கோழிக்கோடு ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் நேற்று நடந்தது. இதில் காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தால்தான் இந்திய நாகரீகம் வளர்ச்சி அடைந்தது. வெறுப்பு, வன்முறை, முரண்பாடு, மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றில் இருந்து விடுபட விரும்பும் உலகில், இந்திய வழிமுறைதான் நம்பிக்கை அளிக்கிறது. முரண்பாடுகளை தவிர்க்கும் இந்திய வழி அடக்குமுறை அல்ல. பேச்சுவார்த்தைதான்.

இந்தியர்களின் புதுமை ஆர்வம், உலகை இந்தியாவை நோக்கி ஈர்க்கிறது. அமைதி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் ஆகியவைதான், உலகை இந்தியாவை நோக்கி ஈர்க்கின்றன. பல தரப்பட்ட மொழிகள், பாரம்பரியங்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள், நூற்றாண்டுகளாக நம் நாட்டில் இருந்தாலும், நாம் அமைதியாக வாழ்கிறோம். நாம் உலக நாடுகளை நம் நாட்டுக்கு வரவேற்கிறோம். பல நாடுகளின் நாகரீகம் வளராதபோது, நமது நாகரீகம் வளர்ந்தது எப்படி? ஏனென்றால், இங்குதான் அமைதி மற்றும் மதநல்லிணக்கம் உள்ளது. சிந்தனைகள், எளிமையான செயல்பாடுகள்தான் பாரம்பரியமாக மாறுகிறது. அதுவே, இந்தியாவின் பலமாக உள்ளது.

ஐ.நா அமைதி பணிக்கு பல ஆண்டுகளாக அதிக பங்களிப்பு அளிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சண்டை நடக்கும் நாடுகள் சிலவற்றில், அமைதி நிலவியதற்கு, நமது வீரர்கள் முக்கிய பங்காற்றி உள்ளனர். இந்தியா முன்னேறும்போது, உலகமும் முன்னேறும் என இந்தியா நம்புகிறது. உலகம் செழிக்கும்போது, அதனால் இந்தியா பயனடையும். எது நல்லதோ அதை ஏற்றுக் கொள்வதுதான் இந்திய பாரம்பரியம். வெளிப்படை தன்மை இருக்கும்போது, பலதரப்பட்ட கருத்துக்களுக்கு மதிப்பு அளிப்பதும், புதுமையும் இயற்கையானது. நமது நாட்டில் திறமைமிக்க இளைஞர்கள் அதிகம் உள்ளனர்.

நமது மென்பொருள் துறை, இந்திய இளைஞர்களின் சக்தியை காட்டுகிறது. பல காரணங்களால், உலக அரங்கில் இந்தியாவின் நிலை உயர்ந்து வருகிறது. முதலீடுகளுக்கு நமது மக்கள் தொகை காந்தம் போல் ஈர்க்கிறது. எல்லோரும் இந்தியாவில் இருக்கத்தான் விரும்புகின்றனர். நிதி தேவைக்கான முத்ரா திட்டம், ஆரோக்கியத்துக்கான ஆயுஸ்மான் பாரத் திட்டம் போன்றவை முக்கிய சாதனைகள். நமது தேர்தல் முறையை பாருங்கள். கோடிக்கணக்கானோர் அமைதியாக வாக்களிக்கின்றனர். இந்திய சிந்தனை, உலகுக்கு பல விஷயங்களை கொடுத்துள்ளது. இன்னும் பல விஷயங்களை அளிக்கும் திறன் அதற்கு உள்ளது. நமது உலகம் சந்திக்கும் பல சவால்களை தீர்ப்பதற்கான ஆற்லும் இந்திய சிந்தனைக்கு உள்ளது. இவ்வாறு மோடி பேசினார். ஐஐஎம் வளாகத்தில் விவேகானந்தர் சிலையையும், அவர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.


Tags : speech ,Indian ,Modi ,conflict , Violence, repression, Indian method, PM Modi, speech
× RELATED இந்திய சினிமாவில் அதிரடியாக...