பேரவையில் உறுப்பினர்கள் கண்ணியமாக பேச வேண்டும்: மக்களவை சபாநாயகர் அறிவுரை

லக்னோ: ‘‘சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை கண்ணியமான முறையில் முன்வைக்க வேண்டும்,’’ என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார். காமன்வெல்த் நாடாளுமன்ற கூட்டமைப்பின் இந்திய மண்டலத்துக்கான 7வது மாநாடு, உத்தரபிரதேச சட்டப்பேவையில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய பிரதேச கவர்னர் லால்ஜி தாண்டன், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், சட்டப்பேரவை சபாநாயகர் ஹிருதய் நாராயணன் தீக்‌ஷித், உபி மேலவை தலைவர் ரமேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா பேசியதாவது:

ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்து விட்டது. சுதந்திரத்துக்கு பின் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதமும் அதிகரித்துள்ளது. இதனால், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பொறுப்பும் அதிகரித்துள்ளது. எனவே, பேரவையில் உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை வலுவாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் வைக்கலாம். ஆனால், அதை கண்ணியமாகவும் ஒழுங்கான முறையிலும் வைக்க வேண்டும். ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசுக்கும், பொதுமக்களும் பாலமாக செயல்படவேண்டும். ஜனநாயகம் நமது தேசத்தின் ஆன்மாவாக விளங்குகிறது. பல்வேறு மதங்கள், சாதிகள், மொழிகள் மற்றும் பல்வேறு பேச்சு வழக்குகளையும் நமது நாடு கொண்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது தேசத்தின் அடையாளமாக விளங்குகிறது. இதனால்தான், நமது நாடாளுமன்ற பாரம்பரியம் இன்றும் உயிருடனும் தீவிரமாகவும் செயல்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Speaker ,Lok Sabha ,House ,Advocate , Council, Members, Lok Sabha Speaker, Adv
× RELATED வாழப்பாடியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்