ஊக்குவிக்கும் நாடுகள் இருக்கும் வரையில் தீவிரவாதத்தை ஒழிப்பது கடினம்: முப்படை தலைமை தளபதி ஆவேசம்

புதுடெல்லி: ‘‘தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தீவிரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டும்,’’ என்று முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். புவிசார் அரசியல், புவி பொருளாதாரம் குறித்த இந்தியாவின் ‘ரெய்சினா பேச்சுவார்த்தை’ மாநாடு கடந்த 14ம் தேதி டெல்லியில் தொடங்கியது. மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து ‘ஆய்வு கண்காணிப்பு அறக்கட்டளை’  நடத்தும் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பேசியதாவது: குறிப்பிட்ட சில நாடுகள் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருவதால், உலக நாடுகள் ஒருவித அச்சத்துடன்தான் வாழ வேண்டியுள்ளது. எனவே, தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டும்.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர், தீவிரவாதத்தை ஒழிக்க அமெரிக்கா எப்படி நடவடிக்கை எடுத்ததோ, அது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதுவரை, தீவிரவாதத்தை ஒழிக்கும் போர் முடிவுக்கு வந்து விட்டதாக நாம் எண்ணுவது மிகப் பெரிய தவறாகும். தீவிரவாதத்தை ஆதரிக்கும் எந்தவொரு நாடும், உலக நாடுகளுடன் இணைந்து தீவிரவாதத்தை ஒழிக்க போரிடவில்லை என்பதே உண்மையாகும். இந்த நாடுகள் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும். தீவிரவாதத்தை விட்டொழிக்க தயாராக இருக்கும் எந்தவொரு நாடு, அமைப்புடனும் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்கலாம், தொடரலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : commander ,army ,countries , Promoting Nations, Terrorism, Commander-in-Chief
× RELATED மனித உரிமை மீறல் புகார்...