×

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து என்னிடம் கூறாமல் வழக்கு தொடர்ந்தது தவறு: கேரள அரசு மீது கவர்னர் ஆரிப் முகமதுகான் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: ‘குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக என்னிடம் தெரிவிக்காமலே கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது நெறிமுறைகளை மீறிய செயல்,’ என்று கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான் தெரிவித்தார். குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் கேரள அரசிற்கும், அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு ஆதரவாக கவர்னர் பல நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். இதற்கு கேரள அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், கவர்னரை கண்டித்து கம்யூ., காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சியினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கேரளாவில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வார்டு  எண்ணிக்கையை அதிகரிக்க கேரள அரசு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இந்த அவசர சட்டம் கவர்னர் ஒப்புதலுக்காக கடந்த சில நாட்களுக்கு முன் கேரள அரசால் அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், இதில் கையெழுத்திட கவர்னர் மறுத்துள்ளார். இதையடுத்து கேரள அரசுக்கும் கவர்னருக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில், கவர்னர் ஆரிப் முகமது கான் நேற்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக, விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு எண்ணிக்கையை கூட்டும் அவசர சட்டத்தில் கையெழுத்திட மாட்டேன் என்று நான் கூறவில்லை. கையெழுத்திடுவதற்கு முன் எனக்கு அதில் சில சந்தேகங்கள் ஏற்பட்டன. அதை தெளிவுபடுத்த வேண்டும் என்றுதான் நான் கூறினேன். இந்த மாத இறுதியில் சட்டசபை கூட உள்ளது. இந்த நிலையில், அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. சபையை கூட்டி அதில் தீர்மானம் எடுக்கலாம். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது.

அதேபோல், இந்த சட்டத்தை நிறைவேற்றவும் சட்டசபையை கூட்டலாமே. குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வாறு வழக்கு தொடர்ந்ததில் எந்த தவறும் இல்லை. ஆனால், ஒரு மாநிலத்தின் கவர்னர் என்ற முறையில் என்னிடம் தகவல் தெரிவிக்காமல் மத்திய அரசிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது நெறிமுறைகளை மீறிய செயலாகும். இதை ஏற்க முடியாது. நான் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.கவர்னரின் இந்த பேச்சு, கேரள அரசுக்கும் அவருக்கும் இடையிலான மோதலை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.


Tags : Kerala Arip Mohammed ,state ,Kerala ,Government Of Kerala , Citizenship Amendment Act, Case, Fault, Kerala Government, Governor Arif Mohamed
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...