×

திருத்தணி ஒன்றியத்தில் கடத்தப்பட்டதாக புகார் கூறப்பட்ட பெண் கவுன்சிலர் நீதிமன்றத்தில் ஆஜர்: இரு தரப்பு நெருக்கடியால் தாய் வீடு சென்றதாக வாக்குமூலம்

சென்னை: அதிமுக ஒன்றிய பெண் கவுன்சிலரை சில நபர்கள் கடத்தி சென்றதாக அவரது கணவர், மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்ததுடன், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த நிலையில், நேற்று போலீசார் ஒன்றிய பெண் கவுன்சிலரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். திருத்தணி ஒன்றியத்தில் மொத்தம் 12 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு கடந்த மாதம் 27ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில், அதிமுக 4 இடத்திலும், திமுக 3 இடத்திலும், பாமக, காங்கிரஸ் தலா ஒரு இடத்திலும், 3 இடத்தில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் கடந்த 6ம் தேதி பதவியேற்றனர். கடந்த 11ம் தேதி நடந்த மறைமுக தேர்தலில், ஒன்றிய குழுத் தலைவர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளர் சூர்யநகரம் ஒன்றிய கவுன்சிலர் காஞ்சனா, முருக்கம்பட்டு ஒன்றிய கவுன்சிலர் தங்கதனம் ஆகியோர் போட்டியிட இருந்தனர். ஆனால், மறைமுக தேர்தலுக்கு கவுன்சிலர்கள் யாரும் வராததால் மறுதேதியின்றி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 10ம் தேதி திருவள்ளூர் ஏ.எம்.நகரில் தாய் வீட்டில் இருந்த 2வது வார்டு ஒன்றிய  கவுன்சிலர் பூங்கொடியை சிலர் கடத்தி சென்றதாக அவரது கணவர் கோட்டி மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்தார். மேலும், இரு நாட்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோட்டி, கடத்தப்பட்ட என் மனைவி பூங்கொடியை மீட்டு தரவேண்டும் என ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே, நேற்று அதிகாலையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் கவுன்சிலர் பூங்கொடி, திருப்பதியில் உள்ள அலப்பாரி போலீஸ் நிலையத்தில் சரண் அடந்தார். அங்கிருந்து திருத்தணி மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட பூங்கொடியை திருத்தணி டி.எஸ்.பி., சேகர், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, முருகன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, போலீசார் மற்றும் நிருபர்களிடம் பூங்கொடி கூறுகையில், ‘‘என்னை யாரும் கடத்திச் செல்லவில்லை. இரு தரப்பினர் கொடுத்த நெருக்கடி காரணத்தால் என் தாய் வீட்டில் தங்கியிருந்தேன்’’ என்றார். தொடர்ந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பூங்கொடியை ஆஜர்படுத்தினர். நீதிபதியிடம், பூங்கொடி, ‘என்னை யாரும் கடத்தவில்லை, திருவள்ளூரில் உள்ள தாய் வீட்டிற்கு செல்கிறேன்’ என கூறியபடி கணவர் கோட்டியுடன் சென்றார்.

Tags : Woman councilor ,abduction ,Union Territory Court In Correctional Union ,In-Court ,Female Councilor , In Correctional Union, complaint of kidnapping, female councilor, in court, ajr
× RELATED “சென்னையில் குழந்தை கடத்தல் எதுவும்...