×

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் காலமானார்: எம்ஜிஆர்-எம்ஆர்.ராதா வழக்கில் ஆஜரானவர்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், குஜராத் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் (92) காலமானார். இவரது சொந்த ஊர் மன்னார்குடி அருகே உள்ள புளியங்குடி. சென்னை திருவல்லிக்கேணியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து அதன் பிறகு சட்டப்படிப்பை முடித்தார். வக்கீலாக தொழிலை தொடங்கிய இவர், 1967ல் தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீலாக பணியாற்றினார். பின்னர் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக பொறுப்பேற்றார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜரானவர். கடந்த 1969ல் சென்னை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக பதவியேற்றார். அதன் பின்னர் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். 1985ல் குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார். 1990ல் ஓய்வு பெற்றார். இதையடுத்து, குஜராத் மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பேற்றார்.

கடந்த 1997ல் நடந்த கோவை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக இவரது தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. பல்வேறு சிறப்பு வாய்ந்த பொறுப்புகளை வகித்த நீதிபதி கோகுலகிருஷ்ணன் நேற்று முன்தினம் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மு.க.ஸ்டாலின் இரங்கல்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘நீதி பரிபாலனத்தில் நடுநிலை தவறாமல் சாமானியர்களுக்கும் நீதி வழங்கியவர் நீதிபதி கோகுலகிருஷ்ணன். அவர் ஓய்வு பெற்ற பிறகு, ‘கோவை கலவரம்’ தொடர்பான விசாரணைக் கமிஷனின் தலைவராகப் பொறுப்பேற்று, சமூக மற்றும் மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் முக்கிய அறிக்கையை திமுக அரசுக்கு அளித்தவர்.

கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ நூலின் ஆறாம் பாகத்தை வெளியிட்ட அவர்- தலைவர் மறைந்த போது ‘நீதியரசர்களின் நினைவேந்தல்’ நிகழ்ச்சியில் பங்கேற்று புகழஞ்சலி செலுத்தியவர். சட்ட நுணுக்கங்களில் மட்டுமின்றி, சமூக நலப் பணிகளிலும் மிகுந்த ஆர்வம் மிக்கவராக விளங்கிய அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நீதித்துறையைச் சார்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்த இரங்கல் செய்தியில், ‘விரைவான, அதேசமயம் சரியான நீதி வழங்குவதிலேயே நீதித் துறையின் மேன்மை அடங்கியிருக்கிறது என்பதை தமது கொள்கையாகக் கொண்டிருந்த நீதிபதி கோகுலகிருஷ்ணன், சிறந்த உதாரணமாகவும் திகழ்ந்தார். எனது நண்பர்களில் ஒருவராக திகழ்ந்த அவர், தமிழ் மற்றும் தமிழிசை சார்ந்த பாமக பணிகளை பாராட்டியுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நீதித்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags : BR Gokulakrishnan ,Madras High Court ,Chennai , Former High Court Judge , Chennai, BR Gokulakrishnan, passed away
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு