×

ஜோலார்பேட்டையில் பரபரப்பு சரக்கு ரயில் இன்ஜின் திடீரென தடம் புரண்டது: 4 எக்ஸ்பிரஸ்கள் தாமதம்; பயணிகள் அவதி

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் திடீரென தடம் புரண்டது. இதனால் 4 எக்ஸ்பிரஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னையில் இருந்து சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின்நிலையத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு, நிலக்கரியை ஏற்றிசென்ற சரக்கு ரயில் அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை  ரயில் நிலையம் வந்தது.
அப்போது வழித்தடம் மாறும் போது, அந்த ரயிலின் இன்ஜின் திடீரென தடம் புரண்டது. இதில், இன்ஜின் முன் பகுதியில் உள்ள 3 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக வந்த அதிகாரிகள், மீட்புக்குழுவினர் இன்ஜினை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மாற்று இன்ஜின் வரவழைக்கப்பட்டு, சரக்கு ரயிலின் பின்புறம் இணைத்து, திருப்பத்தூர் ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இன்ஜினை, நேற்று அதிகாலை 12 மணியளவில் சரிசெய்தனர். இதன் காரணமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் திருப்பத்தூர் ரயில் நிலையத்திலும், ஹவுரா எக்ஸ்பிரஸ் சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்திலும், ஏற்காடு எக்ஸ்பிரஸ் சாமல்பட்டி ரயில் நிலையத்திலும், பழனி எக்ஸ்பிரஸ் தொட்டம்பட்டி ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேர தாமதத்திற்கு, பின்பு அவை புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

Tags : Travelers ,Jolarpettai ,Avadi , Jolarpet, a freight train engine suddenly derailed
× RELATED பரோட்டா சாப்பிட்ட தொழிலாளி மூச்சு திணறி பரிதாப சாவு: ஆவடி அருகே சோகம்