×

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் ககன்யான் வீரர்களுக்கு அடுத்த வாரம் பயிற்சி: ரஷ்யாவில் 11 மாதம் தரப்படுகிறது

புதுடெல்லி: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்ட பயிற்சிக்காக, 4 இந்திய விண்வெளி வீரர்கள் ரஷ்யாவில் அடுத்த வாரம் பயிற்சி பெற உள்ளனர். இந்தியா சுதந்திரம் பெற்று 75வது ஆண்டு விழா வரும் 2022ம் ஆண்டில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, அந்த ஆண்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை ரூ.10 ஆயிரம் கோடி செலவில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. பாகுபலி ஜிஎஸ்எல்வி மார்க் -3 என்ற ராக்கெட், இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு கொண்டு செல்கிறது.

இந்நிலையில், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டப் பயிற்சிக்காக விமானப்படையில் இருந்து 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ரஷ்யாவில் பயிற்சி பெற உள்ளனர். இது தொடர்பாக மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திரா சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரஷ்யாவில் இந்திய விண்வெளி வீரர்கள் 4 பேருக்கு ஜனவரி 3வது வாரம் முதல் பயிற்சி அளிக்கப்படும். 11 மாதம் அளிக்கப்படும் இந்த பயிற்சி நிறைவடைந்ததும் இந்தியாவில் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் பயணக் குழுவுக்கு பயிற்சி அளிப்பார்கள்,’ என்று கூறப்பட்டுள்ளது.


Tags : men ,Gagayan ,Russia ,space , Astronaut, man, planner, Kaganian player, next week, training, Russia, 11 month
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட் கார்சியா சுட்டுக்கொலை!