×

கூட்டணியில் பிளவு என்பது வதந்தி நிதிஷ் தலைமையில் தேர்தலை சந்திப்போம்: பீகாரில் அமித்ஷா பேச்சு

வைசாலி: `பீகார் சட்டப்பேரவை தேர்தலை முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி சந்திக்கும்,’’ என்று அமித்ஷா கூறியுள்ளார். மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில், எதிர்க்கட்சியினர் சிறுபான்மையினரை தவறாக வழி நடத்துவதாக ஆளும் பாஜ தலைமையிலான அரசு குற்றம் சாட்டி வருகிறது. இதனிடையே, பாஜ சார்பில் இது தொடர்பான விளக்க கூட்டம், விழிப்புணர்வு பிராசரம் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இந்நிலையில், பீகாரின் வடக்கு மாவட்டமான வைசாலியில் நேற்று நடந்த சிஏஏ விளக்க கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜ தலைவருமான அமித்ஷா பேசியதாவது:

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் கருத்து வேறுபாடு நிலவுவதாக வதந்தி பரப்பப்படுகிறது. அந்த வதந்தியை பீகார் மக்கள் அழிக்க வேண்டும். பீகார் சட்டப்பேரவை தேர்தலை முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி சந்திக்கும். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், சிஏஏ, ராமர் கோயில் கட்டுவது உள்ளிட்டவை தொடர்பாக மோடி அரசு எடுக்கும் நடவடிக்கைகளை மக்கள் ஆதரிக்க வேண்டும். சிஏஏ.வின் மூலம் ஒருவருக்கு குடியுரிமை வழங்கப்படுமே தவிர, யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது. சிஏஏ சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்தும் காரணத்தால்தான், நாடு முழுவதும் விழிப்புணர்வு பேரணி, பிரசாரத்தை நடத்துகிறது.

ஊழல் வழக்கில் சிறை சென்றுள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவ், நமது கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் பீகார் மாநிலம் விளக்கு (ஆர்ஜேடி.யின் தேர்தல் சின்னம்) காலத்தில் இருந்து எல்இடி காலத்தை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறது என்பதை அவர் உணர வேண்டும். நாடும், மாநிலமும் பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் முன்னேற வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Tags : coalition ,Amit Shah ,Bihar ,election ,Nitish , Alliance, Split, Nitish Leadership, Meet, Amit Shah
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...