×

எதிர்காலத்தில் காற்று மாசுவை வெகுவாக குறைக்கும் கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருள் தயாரிப்பு: சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் சாதனை

சென்னை: கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருளை தயாரிக்கும் புதிய சாதனையை சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் செய்துள்ளனர். சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக தலைநகர் டெல்லி மற்றும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. காற்று மாசு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் வாகனப்புகை முக்கிய இடத்தில் உள்ளது. வாகனப் புகையிலிருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு காற்று மாசுவின் அளவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு மாற்று ஏற்பாடாக கார்பன் டை ஆக்சைடு வராத வகையில் எரிபொருளை தயாரிக்க ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு சோதனைகளை நடத்தி வந்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சூரிய சக்தி மூலம் கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருளை தயாரித்து சாதனை படைத்தனர்.

ஹைட்ரஜன் எரிபொருளின் உற்பத்தி செலவு குறைவாக இருந்தாலும், அது எளிதில் தீப்பிடிக்கும் வாய்ப்பு இருப்பதால் வாகனங்களில் பொருத்துவது மற்றும் சேமித்து வைப்பதில் சில பாதகமான விஷயங்கள் உள்ளன. எனினும், அதனை மிகவும் பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கும் தொழில்நுட்பங்களும் வளர்ந்து விட்டன. இந்நிலையில், சென்னை ஐஐடி விஞ்ஞானிகளும் கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருளை தயாரிக்கும் சாதனையை செய்துள்ளனர். இதன் மூலம் எதிர்காலத்தில் காற்று மாசு வெகுவாக குறையும் என்று ஐஐடி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடல் நீரிலிருந்து தயாரிக்கப்படும் ஹைட்ரஜன் எரிபொருளை பயன்படுத்தும்போது அதிலிருந்து கார்பன் டை ஆக்சைடு வெளியேறுவதில்லை. இதனால் காற்று மாசு ஏற்பட வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்த எரிபொருளை சேமித்து வைக்க தேவையில்லை. நமது தேவைக்கு ஏற்ப தயாரித்துக்கொள்ளலாம். இதனால், பாதுகாப்பு மட்டுமல்லாமல் எரிபொருளை கொண்டு செல்வதற்கான செலவும் ஏற்படாது. கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருளை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் செலவும் குறைவு. இந்த ஹைட்ரஜன் எரிபொருளை கார் போன்ற வாகனங்களுக்கு மட்டுமல்லாமல் விமான போக்குவரத்திற்கும் பயன்படுத்தலாம் என்று சென்னை ஐஐடி விஞ்ஞானி மாலிக் தெரிவித்துள்ளார்.

மேலும், கடல் நீரிலிருந்து தயாரிக்கப்படும் ஹைட்ரஜன் எரிபொருளை ராக்கெட்டுகளை ஏவுவதற்கும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தில் பயன்படுத்துவதே எங்களின் எதிர்கால திட்டம். அந்த நாளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். ஹைட்ரஜன் எரிபொருளை வாகனங்களுக்கு பயன்படுத்துவது தொடர்பான ஆய்வுகளும் முடிவடைந்துள்ளன. தற்போது ஹைட்ரஜன் எரிபொருளை தயாரிக்கும் திட்டத்தை மேம்படுத்தி வருகிறோம் என்றும் ஐஐடி விஞ்ஞானிகள் கூறினர்.

Tags : Chennai ,IIT Scientists ,scientists ,IIT , Air Pollution, Reducing, Hydrogen Fuel, Archives, IIT Scientists, Adventure
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...