×

பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக 4,500 சிறப்பு பஸ்கள் இயக்கம்: ஒட்டுமொத்தமாக 16,971 பஸ்கள் இயக்க நடவடிக்கை

சென்னை: பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு திரும்ப வசதியாக நேற்று முதல் நான்கு நாட்களுக்கு சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கலை பொதுமக்கள் நேற்று முன்தினம் உற்சாகத்துடன் கொண்டாடினர். சென்னை உள்பட பல மாவட்டங்களில் 2 நாள் முன்னதாகவே பொங்கல் கொண்டாட்டம்  களைகட்டியிருந்தது. பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் 2 நாளுக்கு முன்பே சமத்துவ பொங்கல் கொண்டாடினர். அதேபோல், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களிலும் ஊழியர்கள் பொங்கல் வைத்து  வழிபட்டனர்.

பொங்கலை சொந்த ஊரில் கொண்டாட, சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பஸ், ரயில்களில் படையெடுத்தனர். தமிழக அரசு சார்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு கடந்த 10ம்தேதி முதல் 15ம்தேதி அதிகாலை வரை 17,000 சிறப்பு  பஸ்கள் இயக்கப்பட்டன.இதன் மூலம் சுமார் 9 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 லட்சம் பயணிகள் அதிகம் பயணம் செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் ஊர்களுக்கு சென்றவர்கள் பொங்கல் பண்டிகையை முடித்துக் கொண்டு, நேற்று முதல் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இதனால் சென்னை மற்றும் பிற நகரங்களுக்கு பயணிகள் திரும்பும் வகையில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் நேற்று முதல் வரும் 19ம்தேதி வரை 4 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.அதன்படி, இந்த 4 நாட்களில் தினசரி இயக்கப்படும் நிர்ணயப் பேருந்துகள் 8900 இயக்கப்படுகிறது. பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 4500 சிறப்பு பேருந்துகளும், திருப்பூருக்கு 1200 சிறப்பு பேருந்துகளும், கோவைக்கு 1525 சிறப்பு பேருந்துகளும், பெங்களூருக்கு 376 சிறப்பு பேருந்துகளும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 9370 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 16,971 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்த சிறப்பு பேருந்துகள் சென்னைக்குள் அதிகாலை முதல் வரும் என்பதால் ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டு போக்குவரத்தை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சிறப்பு பேருந்துகள் அனைத்தும் வாகன நெரிசலில் சிக்கிக் கொள்ளாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

முன்பதிவு மூலம் 11 கோடி வருவாய்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் கிடைத்த வருமானம் குறித்து போக்குவரத்து துறை முழுமையாக கணக்கிட்டு வருவாய் குறித்த தகவல்களை வெளியிடும். இருப்பினும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று வரை ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 47 ஆயிரத்து 27 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் 11 கோடியே 80 லட்சம் வருவாய் போக்குவரத்து துறைக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai Pongal ,hometown ,Chennai , Pongal, hometown, return to Chennai, comfortable, 4,500 special buses, movement
× RELATED தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப...